ஆயுதப்படை போலீஸ் வேன் மோதி வாலிபர் பலி
மாயனூரில் ஆயுதப்படை போலீஸ் வேன் மோதி வாலிபர் பலியானார். 2 போலீஸ்காரர்கள் காயம் அடைந்தனர்.
கிருஷ்ணராயபுரம்
போலீஸ் வேன்
தஞ்சாவூரை சேர்ந்தவர் வீரமணி (வயது 29). இவர் ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் தனியார் கம்பெனியில் வேலைப்பார்த்து வந்தார். நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் தன்னுடைய வீட்டுக்கு வந்தார். பின்னர் வேலைக்காக மோட்டார் சைக்கிளில் நேற்று பெருந்துறை நோக்கி சென்று கொண்டிருந்தார். கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் மாயனூர் தண்ணீர் பாலம் அருகே வந்தபோது, அந்த வழியாக ஆயுதப்படைக்கு சொந்தமான போலீஸ் வேனில் 10-க்கும் மேற்பட்ட போலீஸ்காரர்களை ஏற்றி கொண்டு திருச்சி நோக்கி வந்து கொண்டிருந்தது.
வாலிபர் பலி
அப்போது எதிர்பாராத விதமாக வீரமணி மோட்டார் சைக்கிள் மீது ஆயுதப்படை போலீஸ் வேன் மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட வீரமணி படுகாயம் அடைந்தார். மேலும் வேன் டிரைவர் திடீரென பிரேக் பிடித்ததால் உள்ளே இருந்த போலீஸ்காரர்கள் அருணகிரி, சாதிக் பாட்சா ஆகியோர் காயம் அடைந்தனர்.
இதைக்கண்ட அந்த வழியாக சென்றவர்கள் விபத்தில் சிக்கிய 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி வீரமணி பரிதாபமாக இறந்தார்.
வழக்குப்பதிவு
போலீஸ்காரர்கள் அருணகிரி, சாதிக்பாட்சா ஆகியோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து மாயனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மோட்டார் சைக்கிள் மீது ஆயுதப்படை போலீஸ் வேன் மோதி வாலிபர் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story