பா.ஜனதா பெண் தொண்டர்களை அவதூறு பேசியதாக சஞ்சய் ராவத் எம்.பி. மீது வழக்கு
பா.ஜனதா பெண் தொண்டர்களை அவதூறு பேசியதாக சஞ்சய் ராவத் எம்.பி. மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கு மராட்டிய அரசு எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.
மும்பை,
பா.ஜனதா பெண் தொண்டர்களை அவதூறு பேசியதாக சஞ்சய் ராவத் எம்.பி. மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதற்கு மராட்டிய அரசு எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.
பா.ஜனதா புகார்
பா.ஜனதா கட்சியின் தேசிய பொது செயலாளர் தீப்தி ராவத் பரத்வாஜ் கடந்த 9-ந் தேதி டெல்லி போலீசில் புகார் ஒன்றை அளித்தார்.
டெல்லியில் உள்ள மண்டவாலி போலீஸ் நிலையத்தில் அவர், சிவசேனா கட்சியின் மூத்த தலைவரும், ராஜ்யசபா எம்.பி.யுமான சஞ்சய் ராவத் மீது அந்த புகாரை அளித்திருந்தார்.
அதில், மராத்தி செய்தி சேனல் ஒன்றில் ஒளிபரப்பப்பட்ட நேர்காணலில் சஞ்சய் ராவத் எம்.பி. பா.ஜனதா பெண் தொண்டர்களுக்கு எதிராக அதிர்ச்சியூட்டும் வகையான அவதூறு கருத்துகளை கூறியுள்ளதாக குற்றம் சாட்டியிருந்தார்.
வழக்குப்பதிவு
இந்த புகாரின்பேரின் டெல்லி போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். பெண்கள் மீது அவதூறு பரப்புதல், பெண்களின் கண்ணியத்தை அவமதித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளதாக டெல்லி மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சஞ்சய் ராவத், “பெண்களுக்கு எதிராக நான் தெரிவித்தது அவதூறு என்றால், பா.ஜனதா தலைவர்கள் பலர் பேசி வருவதை என்னவென்று கூற முடியும்?. எனது குரலை ஒடுக்க நினைக்கும் முயற்சியை தவிர, இது வேறொன்றும் இல்லை” என்றார்.
மந்திரி நவாப் மாலிக் கேள்வி
இந்தநிலையில் சஞ்சய் ராவத் எம்.பி. மீது வழக்குப்பதிவு செய்துள்ளதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள மராட்டிய மந்திரியும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் முத்த தலைவருமான நவாப் மாலிக், உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் பேசிய வீடியோ கிளிப்பிங் ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர், “சஞ்சய் ராவத்துக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது போலவே இந்த வீடியோவில் பேசியுள்ள உத்தரப்பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் மீது எப்போது வழக்குப்பதிவு செய்யப்படும்?. பா.ஜனதா மற்றும் பா.ஜனதா அல்லாத கட்சிகளின் தலைவர்களுக்கு இங்கு வெவ்வேறு சட்டங்கள் இருக்கின்றன. “ஒரு நாடு இரண்டு சட்டங்கள்” என்று தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story