கிணற்றுக்குள் மோட்டார் அறை சரிந்து விழுந்தது; பெண் பரிதாப சாவு
சிங்கம்புணரி அருகே கிணற்றுக்குள் மோட்டார் அறை சரிந்து விழுந்தது. இதில் பெண் பரிதாபமாக இறந்தார்.. அவரது உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
சிங்கம்புணரி,
சிங்கம்புணரி அருகே கிணற்றுக்குள் மோட்டார் அறை சரிந்து விழுந்தது. இதில் பெண் பரிதாபமாக இறந்தார்.. அவரது உடலை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.
இந்த துயர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
பெண் மாயம்
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகாவுக்கு உட்பட்ட எஸ். செவல்பட்டி ஊராட்சியில் சித்தம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராசு(வயது 48). கூலி தொழிலாளி.இவரது மனைவி அஞ்சலை(45). இவர்களுக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை ராசு வழக்கம் போல கூலி வேலைக்கு சென்று விட்டார். அவரது மனைவி அஞ்சலையும் தான் தினமும் பணியாற்றும் சோமன் என்பவருக்கு சொந்தமான வயலுக்கு சென்று உள்ளார். மாலையில் வீடு திரும்பிய ராசு, வேலைக்கு சென்ற தனது மனைவி வீடு திரும்பாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
மோட்டார் அறை சரிந்து விழுந்தது
பின்னர் அவரை தேடி வயல்வெளிக்கு சென்றார். அங்கு சுமார் 50 அடி ஆழமுள்ள கிணற்றோரம் இருந்த மோட்டார் அறையும் சரிந்து கிணற்றுக்குள் விழுந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.அந்த மோட்டார் அறையின் வாசல் கதவு பக்கம் அஞ்சலை கொண்டு சென்ற சாப்பாட்டு தூக்குவாளி இருப்பதை பார்த்து அலறினார். கிணற்றுக்குள் விழுந்த மோட்டார் அறையுடன் தனது மனைவி விழுந்து இருக்கலாம் என சந்தேகத்தில் இது குறித்து ஊராட்சி மன்ற தலைவர் தேவதாசுக்கும், கிராம மக்களிடமும் தகவல் தெரிவித்தார். இதையடுத்து கிராம மக்கள் அந்த கிணற்றுக்கு வந்து பார்த்தனர். தண்ணீர் நிறைந்து காணப்பட்டதால் கிணற்றில் இருந்து தண்ணீரை வெளியேற்றும் பணி நடந்தது.
இந்த நிலையில் நேற்று காலை தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். பொக்லைன் எந்திரம் கொண்டு வந்து கிணற்றோரம் குழி தோண்டி தேடும் பணி நடந்தது.
இது பற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கோட்டாட்சியர் பிரபாகரன் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன் ஆகியோர் மீட்புப்பணியை துரிதப்படுத்தினர். தீயணைப்புத் துறையின் மாவட்ட அலுவலர் சத்தியகீர்த்தி தலைமையில் உதவி அலுவலர் தாமோதரன் மற்றும் சிங்கம்புணரி நிலைய அலுவலர் அருள்ராஜ் ஆகியோர் கொண்ட 30 பேர் கொண்ட குழு தேடுதல் வேட்டையில் இறங்கினர்.
பெண் உடலை மீட்டனர்
நீண்ட நேர தேடுதலுக்கு பிறகு சகதிக்குள் புதைந்த அந்த பெண் உடலை மீட்டனர். அவரது உடலை பார்த்து கணவர் மற்றும் பிள்ளைகள், குடும்பத்தினர் கதறி அழுதனர். அவரது உடலை திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
இது குறித்து துணை சூப்பிரண்டு அமலநாதன் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். வேலைக்கு சென்ற இடத்தில் மோட்டார் அறை கிணற்றுக்குள் விழுந்ததால் அங்கு இருந்த அந்த பெண் பலியாகி இருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story