மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
புதுக்கோட்டை
புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் கவிதாராமு தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டா மாறுதல் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய
361 மனுக்கள் பெறப்பட்டன. அதனை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
மேலும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் சார்பில் 2 மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.10 ஆயிரம் மதிப்பீட்டில் காதொலிக் கருவிகளும்,
ஒரு மாற்றுத்திறனாளிக்கு ரூ.1,200 மதிப்பீட்டில் கைத்தாங்கியும் வழங்கப்பட்டது. மேலும் திருமயம் வட்டம், மேலபுதுவயல் கிராமத்தை சேர்ந்த அருண் என்பவர் நீரில் மூழ்கி இறந்ததையொட்டி, அவரது தாயார் முத்துலெட்சுமிக்கு முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.1 லட்சத்திற்கான காசோலையினை கலெக்டர் வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கருப்பசாமி, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) பிரேம்குமார், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.
குறைகளை கேட்ட பயிற்சி பெண் போலீஸ் அதிகாரிகள்
புதுக்கோட்டை மாவட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு பயிற்சி பெற்று வரும் பஸீனா பீவி, அபிநயா ஆகியோர் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் செயல்பாடுகள் தொடர்பாக கலெக்டருடன் இருந்து கவனித்தனர். அப்போது மாற்றுத்திறனாளிகள் மனு கொடுக்க தனியாக அமர்ந்திருந்த இடத்திற்கு கலெக்டர் வந்தார். அப்போது அவர் பயிற்சி துணை போலீஸ் சூப்பிரண்டுகளை நலத்திட்ட உதவிகள் வழங்க கூறினார். மேலும் மாற்றுத்திறனாளிகளிடம் மனுக்களை பெற்று குறைகளை கேட்க கூறினார். இதையடுத்து அவர்களும் மனுக்களை பெற்று மாற்றுத்திறனாளிகளின் குறைகளை கேட்டறிந்தனர்.
Related Tags :
Next Story