மாவட்டத்தில் காணாமல் போன ரூ.10½ லட்சம் செல்போன்கள் மீட்பு- உரியவர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர்
நெல்லை மாவட்டத்தில் காணாமல் போன ரூ.10½ லட்சம் செல்போன்களை போலீசார் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் காணாமல் போன ரூ.10½ லட்சம் மதிப்புள்ள செல்போன்களை போலீசார் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.
செல்போன்கள் திருட்டு
நெல்லை மாவட்டத்தில் காணாமல் போன மற்றும் திருட்டு போன செல்போன்கள் தொடர்பாக போலீஸ் நிலையங்களில் அளிக்கப்பட்ட புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்தி செல்போன்களை கண்டுபிடிக்க போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவிட்டார். அதன்படி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
இதில் சமீபத்தில் ரூ.10 லட்சத்து 46 ஆயிரத்து 500 மதிப்புள்ள 70 செல்போன்களை அதன் ஐ.எம்.இ.ஐ எண்ணை வைத்து கண்டுபிடித்து, அவற்றை பறிமுதல் செய்தனர்.
70 செல்போன்கள் ஒப்படைப்பு
அந்த செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நெல்லை மாவட்ட போலீஸ் அலுவலகத்தில் நேற்று காலை நடைபெற்றது.
போலீஸ் சூப்பிரண்டு சரவணன், 70 செல்போன்களையும் அதன் உரிமையாளர்களிடம் வழங்கினார்.
அப்போது அவர் பேசுகையில் கூறியதாவது:-
நெல்லை மாவட்டத்தில் இதுவரை சைபர் கிரைம் போலீசார் ரூ.50 லட்சத்து 21 ஆயிரம் மதிப்புள்ள 315 செல்போன்களை மீட்டுள்ளனர். அவை உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மோசடி புகார்கள்
மேலும் இணையம் மூலம் வேலை வாங்கித் தருவதாகவும், பரிசு விழுந்திருப்பதாக, ஓ.டி.பி. பெற்றுக்கொண்டு பண மோசடி செய்யப்பட்டதாக பெறப்பட்ட புகார்களுக்கு துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு ஏமாற்றியவர்களின் வங்கிக் கணக்கை முடக்கி ரூ.1.77 லட்சம் பாதிக்கப்பட்டோருக்கு திரும்ப பெற்று கொடுக்கப்பட்டுள்ளது.
மோசடி புகார்கள் தொடர்பாக ரூ.5.36 லட்சம் வங்கிகளில் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. இணைய வழி குற்றங்கள் தொடர்பாக 155260 என்ற எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் இயற்கை வளங்களை பாதுகாக்கும் வகையில் செல்போன்களை தொலைத்தவர்களுக்கு சூப்பிரண்டு சரவணன் மரக்கன்றுகளை வழங்கி அவற்றை நல்ல முறையில் வளர்க்கும் படி அறிவுரை வழங்கினார்.
இதில் தலைமையக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மதிவாணன், சைபர் கிரைம் கூடுதல் சூப்பிரண்டு சங்கு, இன்ஸ்பெக்டர் ராஜ், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜேஷ், சைபர் கிரைம் சப்-இன்ஸ்பெக்டர் ராஜரத்தினம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story