புதிதாக 11 மருத்துவக்கல்லூரிகள்: அ.தி.மு.க. ஆட்சியில் செய்த சாதனையை தி.மு.க. சொந்தம் கொண்டாட முடியாது முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பேட்டி


புதிதாக 11 மருத்துவக்கல்லூரிகள்: அ.தி.மு.க. ஆட்சியில் செய்த சாதனையை தி.மு.க. சொந்தம் கொண்டாட முடியாது முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் பேட்டி
x
தினத்தந்தி 14 Dec 2021 1:51 AM IST (Updated: 14 Dec 2021 1:51 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சியில் புதிதாக 11 மருத்துவக்கல்லூரிகள் தொடங்கப்பட்ட சாதனையை தி.மு.க. சொந்தம் கொண்டாட முடியாது என்று சேலத்தில் முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கூறினார்.

சேலம்,
முன்னாள் அமைச்சர் பேட்டி
சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் நேற்று வார்டு நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான உள்கட்சி தேர்தல் நடந்தது. இதற்கு தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
சேலம் மாநகரில் ஜனநாயக ரீதியில் அ.தி.மு.க. உள்கட்சி தேர்தல் நடந்து வருகிறது. இதில் எந்த பிரச்சினையும் இல்லாமல் அமைதியாக நடக்கிறது. விருப்பம் தெரிவித்த கட்சியினர் அனைவருக்கும் வாய்ப்பு வழங்கப்படும்.
தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைய மக்கள் வாக்களிப்பார்கள். விரைவில் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் மட்டுமில்லாமல் அதன்பிறகு வரும் எந்த தேர்தலாக இருந்தாலும் அதை எதிர்கொள்ள அ.தி.மு.க. தயாராக உள்ளது.
11 மருத்துவக்கல்லூரிகள்
கடந்த 10 ஆண்டுகள் நடைபெற்ற அ.தி.மு.க. ஆட்சியில் தான் இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழகத்தில் 11 மருத்துவக்கல்லூரிகள் கொண்டுவரப்பட்டன. சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவ மாணவர்கள் படித்துள்ளனர். 
முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிசாமி இருந்த காலத்தில் அதிகளவில் மருத்துவ மாணவர்கள் படித்திருக்கிறார்கள். ஆனால் அ.தி.மு.க. ஆட்சியில் செய்த சாதனையை தி.மு.க. சொந்தம் கொண்டாட முடியாது. தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் தினமும் கொலை, கொள்ளை, திருட்டு போன்ற சம்பவங்கள் நடக்கின்றன. காவல்துறை அதிகாரிகளுக்கே பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை உள்ளது.
இவ்வாறு பொள்ளாச்சி ஜெயராமன் கூறினார்.
இதைத்தொடர்ந்து ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தில் இருந்த பொருட்களை காணவில்லை என்று ஜெ.தீபா குற்றம் சாட்டியுள்ளாரே? என்று பொள்ளாச்சி ஜெயராமனிடம் கேள்வி கேட்டபோது, இதுபோன்ற கேள்வி எல்லாம் என்னிடம் கேட்கக்கூடாது என்று அவர் தெரிவித்தார்.


Next Story