இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி குறைதீர்க்கும் கூட்டத்தில் பெண்கள் மனு


இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி  குறைதீர்க்கும் கூட்டத்தில் பெண்கள் மனு
x
தினத்தந்தி 14 Dec 2021 1:52 AM IST (Updated: 14 Dec 2021 1:52 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி பெண்கள் மனு அளித்தனர்.

தர்மபுரி:
தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி பெண்கள் மனு அளித்தனர்.
குறைதீர்க்கும் கூட்டம்
தர்மபுரி மாவட்ட பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் திவ்யதர்சினி தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு இலவச வீட்டுமனை பட்டா கல்விக்கடன், முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டரிடம் மனு அளித்தனர்.
இந்த கூட்டத்தில் பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா பே.தாதம்பட்டி கிராம பெண்கள் திரண்டு வந்து ஒரு கோரிக்கை மனு அளித்தனர். அதில் எங்கள் கிராமத்தில் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஏழை குடும்பங்கள் வசித்து வருகிறோம். எங்களுக்கு சொந்தமாக நிலமும், வீடும் இல்லை. எனவே எங்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தனர்.
ஓடையில் ஆக்கிரமிப்பு
பாலக்கோடு தாலுகா ஜாகீர் வரகூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் ஊரில் உள்ள கோலக்குட்டை ஏரியை தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும். அங்குள்ள மோட்டுபாறை ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புகள், வழித்தட ஆக்கிரமிப்புகளை ஆய்வு செய்து அவற்றை அகற்ற வேண்டும் என்று கோரியிருந்தனர்.
மிட்டா நூலஅள்ளி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், எங்கள் கிராமத்தில் சாலை ஓரத்தில் உள்ள புறம்போக்கு நிலத்தில் சிறிய விநாயகர் கோவில் கட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். இதை சிலர் தடுக்கிறார்கள். எனவே கோவில் கட்ட அனுமதிக்க வேண்டும் என்று கோரியிருந்தனர். பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்று ஆய்வு நடத்திய கலெக்டர் திவ்யதர்சினி அந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

Next Story