திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் வாலிபர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு


திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் வாலிபர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
x
தினத்தந்தி 14 Dec 2021 2:02 AM IST (Updated: 14 Dec 2021 2:02 AM IST)
t-max-icont-min-icon

குடிநீர் இணைப்பு வழங்க அதிகாரிகள் மறுத்ததால் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் வாலிபர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி, டிச.14-
குடிநீர் இணைப்பு வழங்க அதிகாரிகள் மறுத்ததால் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் வாலிபர் ஒருவர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
வாலிபர் தீக்குளிக்க முயற்சி
திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மனு கொடுக்க வந்த வாலிபர் ஒருவர், கலெக்டர் அலுவலக போர்டிகோவில் நின்றபடி, தான் தயாராக கொண்டு வந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை அங்கிருந்த ஊர்க்காவல் படை வீரர் சுந்தர் ராஜ் என்பவர் பாய்ந்து சென்று தடுத்து காப்பாற்றினார். அது குறித்த விவரம் வருமாறு:-
குடிநீர் இணைப்புக்கு மறுப்பு
தொட்டியம் அருகே உள்ள காட்டுப்புத்தூர் பகவதி அம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவரது மகன் கலைச்செல்வன் (வயது 29). இவரது வீட்டுக்கு குடிநீர் இணைப்பு கேட்டு காட்டுப்புத்தூர் கிராம நிர்வாக அதிகாரியை அணுகியுள்ளார். ஆனால் அவர் குடிநீர் இணைப்பு வழங்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.
இதையெடுத்து அந்த வாலிபர் கலெக்டர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மனு அளித்தார். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த நிலையில் நேற்று புகார் மனுவுடன் திருச்சி கலெக்டர் அலுவலகம் வந்தவர், கலெக்டர் அலுவலக முன் வாசலில், மறைத்து எடுத்து வந்த பெட்ரோலை எடுத்து தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
விசாரணை
பின்னர் செசன்ஸ் கோர்ட்டு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மோகன், தீக்குளிக்க முயன்ற கலைச்செல்வனை மாவட்ட வருவாய் அதிகாரி பழனிக்குமார் முன்பு கொண்டு நிறுத்தினார். பின்னர் பழனிக்குமார் அவரிடம் விசாரணை மேற்கொண்டார்.
அப்போது பங்காளிகள் பிரச்சினையில் 30 ஆண்டுகளுக்கு மேலாக வீட்டு மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. நாங்கள் மூன்று தலைமுறையாக அந்த வீட்டில் வசித்து வருகிறோம். ஆனால் அதிகாரிகள் குடிநீர் இணைப்பு வழங்க மறுக்கிறார்கள். நிலத்தை அளப்பதற்கும் சர்வேயர் ஒத்துழைப்பு தரவில்லை. எனவே மன உளைச்சலில் பெட்ரோலை ஊற்றி தற்கொலைக்கு முயன்றதாக தெரிவித்தார்.
பரபரப்பு
இதையடுத்து வருவாய் அதிகாரி சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் உண்மை நிலவரம் தொடர்பான விவரம் கேட்டார். உரிய விசாரணைக்கு பின், போலீசார் கலைச்செல்வனை போலீஸ் நிலையம் அழைத்து சென்றனர். கலெக்டர் அலுவலகம் வாசலில் வாலிபர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Tags :
Next Story