கவர்னர் 1,243 மாணவர்களுக்கு நாளை பட்டம் வழங்குகிறார்- துணைவேந்தர் பிச்சுமணி பேட்டி
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நாளை (புதன்கிழமை) நடைபெறும் விழாவில் 1,243 மாணவ-மாணவிகளுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பட்டங்களை வழங்குகிறார் என துணைவேந்தர் பிச்சுமணி தெரிவித்தார்.
பேட்டை:
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நாளை (புதன்கிழமை) நடைபெறும் விழாவில் 1,243 மாணவ-மாணவிகளுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பட்டங்களை வழங்குகிறார்.
இதுகுறித்து பல்கலைக்கழக வளாகத்தில் துணை வேந்தர் பிச்சுமணி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
28-வது பட்டமளிப்பு விழா
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் 28-வது பட்டமளிப்பு விழா நாளை (புதன்கிழமை) காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கி மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார். மொத்தம் பதக்கம் பட்டியலில் இடம் பெற்ற 204 மாணவர்கள், முனைவர் பட்டம் முடித்துள்ள 1,039 பேர் என மொத்தம் 1,243 பேருக்கு கவர்னர் பட்டங்களை வழங்குகிறார்.
விழாவில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வாழ்த்துரை வழங்குகிறார். திருவனந்தபுரம் தேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இணைவுப்புல கழக இயக்குனர் அஜயகோஷ் பட்டமளிப்பு விழா உரையாற்றுகிறார்.
இந்த விழாவையொட்டி கடந்த 2 கல்வி ஆண்டுகளுக்கும் சேர்த்து மொத்தம் 1,08,284 மாணவ-மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்படுகிறது.
இன்று கவர்னர் வருகை
இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக கவர்னர் ஆர்.என்.ரவி இன்று (செவ்வாய்க்கிழமை) பல்கலைக்கழகத்துக்கு வருகிறார். பிற்பகலில் பல்வேறு துறை அலுவலகங்கள், சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையம் ஆகியவற்றை பார்வையிடுகிறார். மேலும் அவர் முன்னாள் ராணுவத்தினர், தேசிய மாணவர் படையினர், கல்லூரி முதல்வர்கள், பல்கலைக்கழக ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோருடன் தனித்தனியாக கலந்துரையாடுகிறார். பல்கலைக்கழக கல்விப்பணி தொடர்பாக நான் (துணை வேந்தர்) விளக்கம் அளிக்கிறேன்.
பல்கலைக்கழக விருந்தினர் மாளிகையில் ஓய்வெடுக்கும் அவர், நாளை காலையில் நெல்லையப்பர் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்கிறார். அங்கிருந்து நேரடியாக பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழா அரங்கிற்கு வந்து மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார்.
பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கும் மாணவ-மாணவிகள் கொரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் போது பதிவாளர் (பொறுப்பு) மருதகுட்டி, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சுருளியாண்டி ஆகியோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story