பயிர் பாதுகாப்பு காப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க வேண்டும்- கலெக்டரிடம் விவசாயிகள் மனு
பயிர் பாதுகாப்பு காப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என கலெக்டரிடம் விவசாயிகள் மனு கொடுத்தனர்.
தென்காசி:
பயிர் பாதுகாப்பு காப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என கலெக்டரிடம் விவசாயிகள் மனு கொடுத்தனர்.
குறை தீர்க்கும் கூட்டம்
தென்காசி மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கலெக்டர் கோபால சுந்தரராஜ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு இலவச வீட்டு மனை பட்டா, அடிப்படை வசதி, பட்டா மாறுதல், விதவை உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை கொடுத்தனர்.
பயிர் பாதுகாப்பு
கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் தென்காசி மாவட்ட குழு மற்றும் சங்கரன்கோவில் வட்டார குழு சார்பில் விவசாயிகள் சேதமடைந்த நெற்பயிருடன் வந்து கோரிக்கை மனு கொடுத்தனர்.
அதில், “தென்காசி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் அனைவருக்கும் 2018-2019 மற்றும் 2020- 2021 ஆகிய ஆண்டுகளில் விவசாயிகள் பயிர் பாதுகாப்பிற்காக செலுத்திய காப்பீட்டு தொகை இதுநாள் வரை முழுமையாக வழங்கப்படவில்லை. எனவே மாவட்டத்தில் அனைத்துப் பகுதிகளிலும் ஏற்பட்டுள்ள விவசாயி இறப்பு மற்றும் பாதிப்பு களுக்கான நிவாரணத் தொகையை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக இதில் அதிகமாக நடுவக்குறிச்சி மேஜர், நடுவக்குறிச்சி மைனர், பட்டாடை கட்டி, ஈச்சந்தா, குலசேகரமங்கலம், வெள்ளாளன்குளம் மற்றும் மாவட்டத்தில் உள்ள பாதித்த பகுதிகளில் உள்ளவர்களுக்கும் உடனடியாக வழங்க கேட்டுக்கொள்கிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.
தனிநபர் ஆக்கிரமிப்பு
தமிழ்நாடு விவசாயிகள் சங்க புளியங்குடி வட்டார கமிட்டி சார்பில் செயலாளர் எஸ்.கே.சீனி பாண்டியன் தலைமையில் விவசாயிகள் மனு கொடுத்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
புளியங்குடி புன்னையாபுரம் விவசாயிகள் 10-க்கும் மேற்பட்ட குளங்கள் மூலமாக விவசாயம் செய்து வரும் நிலங்களுக்கு தினசரி ஏராளமான விவசாய தொழிலாளர்கள் செல்லக்கூடிய பாதையான பெட்டகுளத்தின் கரையை பொக்லைன் எந்திரம் மூலம் தனியார் சிலர் உடைத்து பெத்த நாயக்கர் அணைக்கட்டை உடைத்து பாதையிலும், வயல்வெளிகளிலும் தண்ணீரை திறந்துவிட்டு விவசாயிகளுக்கு இடையூறு செய்து வருகிறார்கள்.
வாலமலை ஆற்றுப்பாசனமான பெரியகுளம் பாஞ்சான-1, மணிகண்டபேரி பாட்டகுளம்-3, அரிய மன்னார்குளம், காஞ்சிரவத்தி, இலஞ்சி குளம்-6, நாரண பேரி-7 ஆகிய குளங்கள் நிரம்பி மழை கூடுதலாக உள்ள காலத்தில் வாலமலை ஆற்றுத் தண்ணீரை சிந்தாமணி கிராமம் முனியபாஞ்சான் அணைக்கட்டு வாயிலாகவும் ஆற்றில் திறந்து விடுவது வழக்கம். இவர்கள் அதனை செய்யாமல் பெட்டகுளத்தை உடைத்து இலந்தைகுளம் வழியாக நாராயண பேரி, கோவிந்தப்பேரி குளங்களில் விட்டும், பெத்தநாயக்கன் அணையை உடைத்தும் விவசாயிகள் பல லட்சம் ரூபாய் செலவு செய்த பாதையை நாசம் செய்தும் விவசாயிகள் நெல் வயல்களில் தண்ணீரை உடைத்துவிட்டு 500 ஏக்கருக்கும் மேற்பட்ட நெற் பயிர்கள் சேதம் அடைந்துவிட்டன. இந்த குளங்களில் தண்ணீர் அளவு உயர்ந்து புளியங்குடி சிந்தாமணி குடியிருப்பு பகுதிக்குள் சென்றுள்ளது. இவர்கள் மேலே கூறிய குளங்கள் நிறைந்தவுடன் ஊர் அருகிலுள்ள கோவிந்தப்பேரி குளங்கள் வழியாக தண்ணீரை விட்டு வியாபாரம் செய்து வருகிறார்கள். மேலும் விவசாயிகளை மிரட்டுகிறார்கள். எனவே இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சாலையை சீரமைக்க வேண்டும்
தென்காசி மலையான் தெரு சத்யா நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்துள்ள மனுவில், “தங்களது பகுதியில் சாலை மிக மோசமான நிலையில் உள்ளது. சாலைகள் பழுதடைந்து ஓடைகள் தெருவின் நடுவிலும் உள்ளன. இதனால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகிறோம். எனவே இருபக்கமும் ஓடைகளை அமைத்து சாலைகள் புதிதாக அமைத்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம்” என்று கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story