சேலம் மாநகராட்சி பகுதியில் 60 வார்டுகளுக்கு அ.தி.மு.க. உள்கட்சி தேர்தல் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார்
சேலம் மாநகரில் 60 வார்டுகளுக்கான அ.தி.மு.க. உள்கட்சி தேர்தல் நேற்று நடந்தது. இதனை எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார்.
சேலம்,
உள்கட்சி தேர்தல்
தமிழகம் முழுவதும் அ.தி.மு.க. அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் மாவட்டங்களில் 2 நாட்கள் உள்கட்சி தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் நேற்று அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கான உள்கட்சி தேர்தல் நடந்தது.
சேலம் மாநகராட்சி பகுதியில் மொத்தம் 60 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க அ.தி.மு.க. உள்கட்சி தேர்தல் சேலம் புதிய பஸ்நிலையம் அருகே உள்ள மாநகர் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் நேற்று நடந்தது.
மாநகராட்சியில் உள்ள 4 மண்டலங்கள் 8 பகுதி வாரியாக பிரிக்கப்பட்டு அ.தி.மு.க. நிர்வாகிகளுக்கான தேர்தல் நடத்தப்படுகிறது. நேற்று தொடங்கிய உள்கட்சி தேர்தலானது இன்றும் (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது.
எடப்பாடி பழனிசாமி
தேர்தல் பொறுப்பாளர்களாக முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், முன்னாள் அமைச்சர் ஆனந்தன், முன்னாள் எம்.பி. சிவசாமி ஆகியோர் இந்த கட்சி தேர்தலை நடத்துகின்றனர். அவர்களுடன், சேலம் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. பாலசுப்பிரமணியம், கட்சியின் அமைப்பு செயலாளர் செம்மலை, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் செல்வராஜ், ரவிச்சந்திரன் ஆகியோர் கட்சியினரிடம் விண்ணப்பங்களை பெற்றுக்கொண்டனர்.
சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் நேற்று நடந்த கட்சி நிர்வாகிகளுக்கான தேர்தல் பணிகளை அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நேரில் பார்வையிட்டார். அவரிடம் கட்சி நிர்வாகிகள் தேர்தலில் போட்டியிட விருப்ப மனுக்களை ஆர்வமுடன் அளித்தனர்.
போட்டியிட விருப்பம்
ஒரு வார்டுக்கு அ.தி.மு.க. அவைத்தலைவர், செயலாளர், இணை செயலாளர்-1 (பெண்), துணை செயலாளர்கள்-2 (ஆண்-பெண்), பொருளாளர்-1, வார்டு பிரதிநிதிகள்-3 என மொத்தம் 9 நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட வேண்டும். இந்த பதவிகளுக்கு ஏற்கனவே விருப்ப மனுக்கள் கட்சி நிர்வாகிகளிடம் இருந்து பெறப்பட்டுள்ளது.
தற்போது நிர்வாகிகள் பதவிக்கு போட்டியிட விருப்பம் தெரிவித்து ஏராளமான கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மனு அளித்துள்ளனர். பெரும்பாலான அ.தி.மு.க. நிர்வாகிகள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர்.
சேலம் மாநகரை போன்று புறநகர் மாவட்டத்திலும் 36 இடங்களில் உள்கட்சி தேர்தல் நடைபெற்றது. இன்றும் (செவ்வாய்க்கிழமை) உள்கட்சி தேர்தல் நடைபெறுகிறது.
சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் நடந்த உள்கட்சி தேர்தலில் மாவட்ட அவைத்தலைவர் பன்னீர்செல்வம், மாவட்ட பொருளாளர் பங்க் வெங்கடாசலம், முன்னாள் மண்டலக்குழு தலைவர் மோகன், பகுதி செயலாளர்கள், முன்னாள் கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story