ஆசிரியரை இடமாற்றம் செய்ய எதிர்ப்பு: அரசு பள்ளி மாணவர்கள், பெற்றோர் திடீர் போராட்டம்
பள்ளி ஆசிரியரை இடமாற்றம் செய்ய மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து தங்கள் பெற்றோருடன் இணைந்து பள்ளி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சூரமங்கலம்,
ஆசிரியர் இடமாற்றம்
வீரபாண்டி ஒன்றியம் இலகுவம்பட்டியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பழைய கட்டிடத்தில் செயல்படுகிறது. 6,7,8-ம் வகுப்புகள் புதிய கட்டிடத்தில் இயங்குகின்றன.
1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை மொத்தம் 160 மாணவ-மாணவிகளும், 6,7,8 ஆகிய வகுப்புகளில் 35 மாணவ-மாணவிகளும் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் ஆங்கில ஆசிரியராக சந்தோஷ்குமார் என்பவர் வேலை பார்த்து வருகிறார்.
இவர் உள்ளூரில் தனியார் பள்ளியில் ஆங்கில வழியில் கல்வி பயின்று வரும் மாணவ-மாணவிகளை அரசு பள்ளியில் சேர்க்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால் மாணவர்களின் பெற்றோர்கள் ஆசிரியரின் முயற்சிக்கு பாராட்டு தெரிவித்தனர்.
பொதுமக்கள் போராட்டம்
இந்த நிலையில் அரசு பள்ளியில் பணிபுரிந்து வரும் ஆசிரிய-ஆசிரியைகள் ஆங்கில ஆசிரியரான சந்தோஷ்குமார் மீது பல்வேறு புகார்களை மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியதாக கூறப்படுகிறது. மேலும் இது சம்பந்தமாக விசாரிப்பதற்காக நேற்று காலை வீரபாண்டி தொடக்கக்கல்வி அலுவலர் திவ்யா தலைமையில் கல்வித்துறை உயர் அதிகாரிகள் பள்ளிக்கு வந்தனர்.
இந்த தகவலை அறிந்த அந்த பகுதி மக்கள் மற்றும் மாணவ, மாணவிகளின் பெற்றோர் பள்ளி வளாகத்துக்கு திரண்டு வந்தனர். பின்னர் ஆங்கில ஆசிரியர் சந்தோஷ் குமாரை பணி இடமாறுதல் செய்தால் எங்களது குழந்தைகளின் கல்விச்சான்றிதழை கொடுக்க வேண்டும் எனக்கூறி திடீரென பள்ளி வளாகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
இதுகுறித்து தகவலறிந்த வீரபாண்டி தொடக்கக்கல்வி அலுவலர் திவ்யா, பள்ளி தலைமை ஆசிரியை புனிதா ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அந்த பகுதி பொதுமக்கள், ஆசிரியர் சந்தோஷ் குமாரை இடமாற்றம் செய்யக்கூடாது என வீரபாண்டி தொடக்கக்கல்வி அலுவலர் திவ்யாவிடம் கோரிக்கை மனுவை கொடுத்தனர். பின்னர் அங்கிருந்து பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.
பள்ளி வளாகத்தில் பொதுமக்கள் திடீரென உள்ளிருப்பு போராட்டம் நடத்திய தகவலறிந்த இரும்பாலை போலீசார் அங்கு வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் இலகுவம்பட்டியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story