குளிர்கால கூட்டத்தொடர் பெலகாவியில் தொடங்கியது - பிபின் ராவத்துக்கு இரங்கல்
பெலகாவி சுவர்ணசவுதாவில் நேற்று குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது. இதில், ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மேலும் ஒரு நிமிட மவுன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
பெங்களூரு: பெலகாவி சுவர்ணசவுதாவில் நேற்று குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது. இதில், ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. மேலும் ஒரு நிமிட மவுன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
கர்நாடக சட்டசபை கூடியது
கர்நாடக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் ஆண்டுதோறும் பெலகாவியில் உள்ள சுவர்ண சவுதாவில் நடத்தப்படுவது வழக்கம். ஆனால் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 மற்றும் 2020-ம் ஆண்டு என 2 ஆண்டுகள் பெங்களூருவில் உள்ள விதானசவுதாவிலேயே குளிர்கால கூட்டத்தொடர் நடந்தது. இந்த நிலையில் நடப்பு ஆண்டு பெலகாவி சுவர்ணா சவுதாவில் டிசம்பர் 13-ந்தேதி (அதாவது நேற்று) தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி கர்நாடக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் பெலகாவியில் உள்ள சுவர்ண சவுதாவில் நேற்று காலை 11 மணிக்கு தொடங்கியது. முதலில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
இரங்கல் தீர்மானம்
அதைத்தொடர்ந்து கூட்டத்தில் கர்நாடக முன்னாள் கவர்னர் ரோசய்யா மறைவு, நீலகிரியில் கடந்த வாரம் ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேரின் மறைவு, நடிகர்கள் புனித் ராஜ்குமார், சிவராம் ஆகியோரின் மறைவு மற்றும் சபையின் முன்னாள் உறுப்பினர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் தீர்மானத்தை சபாநாயகர் காகேரி தாக்கல் செய்தார்.
அதன் மீது முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேசியதாவது:-
நீலகரியில் நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் மரணம் அடைந்தனர். இந்த மரணத்தால் மக்கள் துக்கத்தில் மூழ்கினர். முப்படை தலைமை தளபதி மிகுந்த பாதுகாப்பில் இருக்கக்கூடியவர். அவரே விபத்தில் மரணம் அடைந்தது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிபின் ராவத்தின் தலைமை பண்பு சிறப்பானது.
பலம் இருக்கவில்லை
இந்திய ராணுவத்தை முன்னின்று வழிநடத்தினார். எல்லை கோட்டில் பணியாற்றினார். ஒரு தெளிவான கொள்கையுடன் இருந்தார். நாட்டை அதிகமாக நேசித்தார். திடமான முடிவுகளை எடுத்தார். அதனால் தான் அவரை சாமானிய மக்கள் கூட அதிக மரியாதையுடன் பார்த்தனர். ராணுவத்தை வழிநடத்துவது மிக முக்கியம். நாடு சுதந்திரம் அடைந்த தொடக்கத்தில் நம்மிடம் அதிக பலம் இருக்கவில்லை.
ஆனால் வீரர்கள் இடையே நடைபெறும் போரில், இந்தியா முன்னிலையில் தான் இருந்தது. கன்னடர்களான ஜெனரல் கரியப்பா, ஜெனரல் திம்மையா ஆகியோர் போரில் முக்கிய பங்காற்றினர். அவர்களின் வரிசையில் பிபின் ராவத் சேர்ந்துள்ளார். கரியப்பா, திம்மையா 2 பேரும் குடகு மாவட்டத்தை சேர்ந்தவர்கள். இது நமக்கு பெருமை அளிக்கும் விஷயமாகும்.
அத்துமீறலை தடுத்து நிறுத்தினார்
பிபின் ராவத்துக்கு தேசபக்தி அதிகமாக இருந்தது. அவரது தந்தையும் ராணுவத்தில் அதிகாரியாக பணியாற்றினார். கடந்த 2016-ம் ஆண்டு பாகிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து இந்திய ராணுவம் துல்லிய தாக்குதல் நடத்தியது. அந்த திட்டத்தை சரியாக செயல்படுத்தியவர் பிபின் ராவத். இந்திய எல்லையில் சீனாவின் அத்துமீறலை அவர் தடுத்து நிறுத்தினார். அவர் தனது சிறப்பான பணிக்காக பல்வேறு விருதுகளை பெற்றார். எல்லாவற்றையும் விட அவர் நாட்டு மக்கள் அனைவரின் மனதிலும் இடம் பெற்றுள்ளார்.
அது அவருக்கு பெரிய கவுரவம். அவரது அனுபவம் நமக்கு எப்போதும் தேவையாக இருந்தது. ஆனால் அவரது திடீர் மறைவால், நாட்டிற்கு பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. ராணுவத்தை அவர் நவீனப்படுத்த முயற்சி மேற்கொண்டு வந்தார். அவரது முயற்சியை நாம் தொடர்ந்து முன்னெடுத்து செல்ல வேண்டும். விபத்தில் இறந்த பிபின் ராவத் உள்பட 13 பேர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கிறேன். அவர்களின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்தனை செய்கிறேன். ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் வருண்சிங்கிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் விரைவாக குணமடைய வேண்டும் என்று நான் வேண்டுகிறேன்.
இவ்வாறு பசவராஜ் பொம்மை பேசினார்.
Related Tags :
Next Story