பெலகாவி சுவர்ண சவுதாவை முற்றுகையிட முயற்சி; விவசாயிகள் கைது
வேளாண் சந்தைகள் சீர்திருத்த சட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தி, பெலகாவி சுவர்ண சவுதாவை முற்றுகையிட முயன்ற கோடிஹள்ளி சந்திரசேகர் உள்ளிட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
பெலகாவி: வேளாண் சந்தைகள் சீர்திருத்த சட்டத்தை வாபஸ் பெற வலியுறுத்தி, பெலகாவி சுவர்ண சவுதாவை முற்றுகையிட முயன்ற கோடிஹள்ளி சந்திரசேகர் உள்ளிட்ட விவசாயிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
சீர்திருத்த சட்டம்
கர்நாடக அரசு கடந்த சட்டசபை கூட்டத்தொடரில் நிலசீர்திருத்த சட்டம், வேளாண் சந்தைகள் சீர்திருத்த சட்டங்களை அமல்படுத்தியது. ஆனால் இந்த சட்டங்கள் தங்களது வாழ்வாதாரத்தை பறிக்கும் வகையில் உள்ளதாக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் சீர்திருத்த சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டமும் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நில சீர்திருத்த சட்டம், வேளாண் சந்தைகள் சீர்திருத்த சட்டத்தை மாநில அரசு கைவிட வலியுறுத்தி போராட்டம் நடத்துவது குறித்து பெலகாவி அருகே உள்ள இரேபாகேவாடியில் நேற்று விவசாயிகளின் ஆலோசனை கூட்டம் நடந்தது. கர்நாடக விவசாயிகள் சங்க தலைவர் கோடிஹள்ளி சந்திரசேகர் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.
விவசாயிகள் கைது
இந்த கூட்டத்தின் முடிவில் சீர்திருத்த சட்டங்களை அரசு கைவிட வலியுறுத்தி சுவர்ண சவுதாவை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த விவசாயிகள் முடிவு செய்தனர். பின்னர் கோடிஹள்ளி சந்திரசேகர் தலைமையில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் இரேபாகேவாடியில் இருந்து சுவர்ண சவுதாவுக்கு ஊர்வலமாக புறப்பட்டனர். இதுபற்றி அறிந்த போலீசார் அங்கு வந்து விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது சுவர்ண சவுதாவில் குளிர்கால கூட்டத்தொடர் நடப்பதால் அங்கு போராட்டம் நடத்த அனுமதி இல்லை என்று கூறினர். ஆனாலும் இதை ஏற்க மறுத்து விவசாயிகள் தொடர்ந்து ஊர்வலம் சென்றனர். இதனால் கோடிஹள்ளி சந்திரசேகர் உள்பட 100-க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்து பஸ்களில் ஏற்றி சென்றனர். பின்னர் அவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story