திருவள்ளூர் மாவட்டத்தில் 2 ஆயிரம் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.57 லட்சம் நலத்திட்ட உதவிகள்
திருவள்ளூர் மாவட்டத்தில் 2 ஆயிரம் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.57 லட்சம் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டதாக கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.
அமைப்பு சாரா தொழிலாளர்கள்
உடலுழைப்பு தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் பொருட்டு முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி அவர்களால் கடந்த 1999-ம் ஆண்டு தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு நல வாரியம் உருவாக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து 2006 முதல் 2011 வரை 15 தனி நல வாரியங்கள் உருவாக்கப்பட்டது. மேலும் அமைப்பு சாரா தொழிலாளர்களின் சிரமங்களை கருத்தில் கொண்டு அவர்களுக்கு பதிவு செய்தல், புதுப்பித்தல் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கு ஏதுவாக 2008-ம் ஆண்டு முதல் மாவட்டங்கள் தோறும் தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலகங்கள் ஆரம்பிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அமைப்புசாரா தொழிலாளர்கள் எளிய முறையில் பதிவு செய்யவும், புதுப்பிக்கவும், நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு ஏதுவாக கணினி மயமாக்கப்பட்டது.
நலத்திட்ட உதவிகள்
இதை பின்பற்றி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 1-ந் தேதியன்று சென்னை தலைமை செயலகத்தில் அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு கல்வி உதவித்தொகையாக 31 ஆயிரத்து 428 பயனாளிகளுக்கு ரூ.6 கோடியே 35 லட்சத்து 64 ஆயிரமும், மாதாந்திர ஓய்வூதியத் தொகையாக 17 ஆயிரத்து 338 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 78 லட்சத்து 98 ஆயிரம், இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு உதவித்தொகையாக 1,659 பயனாளிகளுக்கு ரூபாய் 3 கோடியே 92 லட்சத்து 31 ஆயிரமும், திருமண உதவித்தொகை, கண்கண்ணாடி உதவித்தொகை, விபத்து மரணம் உதவித்தொகை, குடும்ப ஓய்வூதியத்தொகை, மகப்பேறு உதவித்தொகை என 50 ஆயிரத்து 721 அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.12 கோடியே 35 லட்சத்து 20 ஆயிரத்து 950 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
கல்வி உதவித்தொகை
அந்தவகையில் திருவள்ளூர் மாவட்டத்தில் நலவாரியங்களில் பதிவு பெற்ற தொழிலாளர்களுக்கு கல்வி உதவித்தொகையாக 350 பயனாளிகளுக்கு ரூ.14 லட்சத்து 94 ஆயிரத்து 750-ம், மாதாந்திர ஓய்வூதியமாக 1,483 பயனாளிகளுக்கு ரூ.14 லட்சத்து 83 ஆயிரமும், இயற்கை மரண உதவி தொகை 84 பயனாளிகளுக்கு, ரூ.20 லட்சத்து 44 ஆயிரம், திருமண உதவித் தொகையாக 130 பயனாளிகளுக்கு, ரூ.4 லட்சத்து 64 ஆயிரம், விபத்து மரணம் உதவித் தொகையாக இரண்டு பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 4 ஆயிரம் என மொத்தம் 2 ஆயிரத்து 49 பயனாளிகளுக்கு ரூ.56 லட்சத்து 89 ஆயிரத்து 750 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
மேற்கண்ட தகவலை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story