சிறுவாபுரி முருகன் கோவிலில் மார்ச் மாதத்தில் கும்பாபிஷேகம்


சிறுவாபுரி முருகன் கோவிலில் மார்ச் மாதத்தில் கும்பாபிஷேகம்
x
தினத்தந்தி 14 Dec 2021 9:10 PM IST (Updated: 14 Dec 2021 9:10 PM IST)
t-max-icont-min-icon

சிறுவாபுரி முருகன் கோவிலில் ரூ.4½ கோடியில் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மார்ச் மாதத்தில் கும்பாபிஷேகம் நடைபெறும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சிறுவாபுரி முருகன் கோவில்

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியத்தில் சின்னம்பேடு என அழைக்கப்படும் சிறுவாபுரியில் ஸ்ரீபாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் 2015-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும்.

எனவே, தமிழக முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றவுடன் அனைத்து கோவில்களையும் ஆகமவிதிப்படி சிறப்புமிக்க கோவில்களை கண்டறிந்து கும்பாபிஷேகத்தை நடத்த அறிவுறுத்தியுள்ளார்.

இதைத்தொடர்ந்து, கோவிலில் ரூ.3¾ கோடியில் பார்க்கிங் வசதி, குளத்திற்கு சுற்றுச்சுவர் அமைத்தல், படிக்கட்டுகள் உள்ளிட்ட புனரமைப்பு செய்யும் திருப்பணிகளும், ரூ.40 லட்சத்தில் கோவிலுக்கு சுற்றுச்சுவர் அமைத்தல் மற்றும் வர்ணம் பூசுதல், கொடி மரத்தை புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

ரூ.38 லட்சத்தில் தரை அமைத்தல்

இந்தநிலையில், ரூ.38 லட்சம் செலவில் கோவிலின் சுற்றுப்பிரகாரத்தில் கருங்கல் தரை அமைக்கும் பணியை நேற்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்.

முன்னதாக கோவிலுக்கு வந்த அவருக்கு குருக்கள் ஆனந்தன் தலைமையில் பூரண கும்ப மரியாதையுடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் நிருபர்களிடம் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:-

இக்கோவிலில் ரூ.2.68 கோடி மதிப்பீட்டில் திருக்குளம் படித்துரை, சுற்றுச்சுவர் கட்டும் பணிகள் திட்டமதிப்பீடு தயாரிக்கப்பட்டு பணிகள் நடைபெறுகிறது. கோவிலில் மொத்தம் ரூ.4 கோடியே 53 லட்சம் செலவில் கோவில் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

கும்பாபிஷேகம்

இந்த பணிகள் அனைத்தும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் நிறைவுபெறும். எனவே, இக்கோவிலுக்கு அப்போது கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்று கூறினார்.

இந்நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகர், டி.ஜே.கோவிந்தராசன், இந்து சமய அறநிலையத்துறை வேலூர் இணை ஆணையர் ஜெயராமன், கோவிலின் செயல் அலுவலர்கள் நாராயணன், பிரகாஷ், ராஜசேகர், தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் செல்வசேகரன், பி.ஜே.மூர்த்தி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


Next Story