தோடர் இன பெண்களிடம் மு க ஸ்டாலின் கலந்துரையாடல்


தோடர் இன பெண்களிடம் மு க ஸ்டாலின் கலந்துரையாடல்
x
தினத்தந்தி 14 Dec 2021 9:25 PM IST (Updated: 14 Dec 2021 9:25 PM IST)
t-max-icont-min-icon

தோடர் இன பெண்களிடம் மு க ஸ்டாலின் கலந்துரையாடல்

ஊட்டி

வாழ்வாதாரம் மேம்பாடு தொடர்பாக தோடர் இன பெண்களிடம் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார். 

மு.க.ஸ்டாலின் கலந்துரையாடல் 

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இதில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். இந்த கூட்டத்தில் இருந்தபடியே முதல்-அமைச்சர், நீலகிரியில் உள்ள தோடர் இன பெண்களிடம் வாழ்வாதாரம் மேம்பாடு தொடர்பாக காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார்.

இதற்காக ஊட்டி தாவரவியல் பூங்காவில் உள்ள தோடர் குடில் முன்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. காணொலி காட்சி மூலம் பேசிய மு.க. ஸ்டாலின், கொரோனா காலத்தில் சுற்றுலா பயணிகள் வராத காலத்தில் எம்பிராய்டரி துணி வகைகளை விற்க என்ன செய்தீர்கள்?, கொரோனா காலத்தில் நீங்கள் ஆற்றிய பணி என்ன என்று கேட்டார். 

துணி உற்பத்தியை அதிகரித்தோம் 

அதற்கு ஆஷா சின் என்பவர் பேசும்போது, நீலகிரியில் 63 மந்துகளில் தோடர் இன மக்கள் வாழ்ந்து வருகிறோம். பூ வேலைப்பாடு மிகுந்த எம் பிராய்டரி துணிவகைகளை தைத்து விற்பனை செய்கிறோம். எங்களது வாழ்வாதாரம் மேம்பட மகளிர் திட்டம் மூலம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. 

மழை பெய்யும் நாட்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வருகை குறைவான காலங்களில் துணி உற்பத்தியை அதிகரிப்பதில் கவனம் செலுத்தினோம். துணி வகைகளை தைக்க 2 முதல் 15 நாட்கள் ஆகும். கொரோனா காலத் தில் சுகாதாரத்துறையுடன் இணைந்து பழங்குடியினர் தடுப்பூசி செலுத்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் ஈடுபட்டு, தடுப்பூசி போட செய்தோம் என்றார்.

பாரம்பரிய உடை

இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்கள், தோடர் இன பாரம்பரிய உடையணிந்து இருந்தனர். அத்துடன் அந்த குடில் முன்பு துணி வகைகள், தேன், தேயிலைத்தூர், தைலம் ஆகியவை காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது.


Next Story