மூதாட்டியிடம் 10 பவுன் சங்கிலி பறிப்பு


மூதாட்டியிடம் 10 பவுன் சங்கிலி பறிப்பு
x
தினத்தந்தி 14 Dec 2021 9:28 PM IST (Updated: 14 Dec 2021 9:28 PM IST)
t-max-icont-min-icon

வேளாங்கண்ணியில் மூதாட்டியிடம் 10 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்கனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

வேளாங்கண்ணி:
வேளாங்கண்ணியில் மூதாட்டியிடம் 10 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்கனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
மூதாட்டியிடம் சங்கிலி பறிப்பு
நாகை மாவட்டம் புத்தூர் தெற்குதெரு பகுதியை சேர்ந்தவர் பேபி (வயது 64). இவர் தனது மகன் அறிவொளி மற்றும் மருமகள், பேரக்குழந்தைகளுடன் கடந்த 12-ந்தேதி வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்தனர். 
பின்னர் இவர்கள் இரவு 7 மணியளவில் கடற்கரையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். கண்காணிப்பு கோபுரம் அருகே சென்று கொண்டிருந்தபோது மறைந்திருந்த மர்ம நபர்கள் திடீரென பேபியின் கழுத்தில் கிடந்த 13½ பவுன் சங்கிலியை பறித்து சென்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், திருடன், திருடன் என சத்தமிட்டுள்ளார். இந்த சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். அதற்குள் மர்ம நபர்கள் தப்பி ஓடி விட்டனர்.
மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
இதுகுறித்து தகவல் அறிந்த வேளாங்கண்ணி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது கடற்கரை மணலில் பேபி அணிந்திருந்த சங்கிலியில் இருந்த தாலி, குண்டு, காசு உள்ளிட்ட 3½ பவுன் நகை கீழே கிடந்துள்ளது.
 பேபியிடம் மர்ம நபர்கள் சங்கிலியை பறித்த போது இவைகள் சங்கிலியில் இருந்து கீழே விழுந்துள்ளது. மீதமிருந்த 10 பவுன் சங்கிலியுடன் மர்ம நபர்கள் தப்பி ஓடி உள்ளனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 10 பவுன் சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story