அமைச்சர் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு


அமைச்சர் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
x
தினத்தந்தி 14 Dec 2021 9:36 PM IST (Updated: 14 Dec 2021 9:36 PM IST)
t-max-icont-min-icon

அமைச்சர் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு

மஞ்சூர்

ஊட்டி அருகே நடந்த அரசு நிகழ்ச்சியில் அமைச்சர் முன்பு பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. உடலில் தீ வைப்பதற்குள் அந்த பெண்ணை போலீசார் மீட்டனர். 

வீடு இடிந்து சேதம் 

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள சேரனூரை சேர்ந்தவர் குருவி. இவருடைய மனைவி ராஜேஸ்வரி (வயது 27). கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக ராஜேஸ்வரி வீடு இடிந்து விழுந்து சேதமானது. 

இது தொடர்பாக நிவாரணம் கேட்டு ராஜேஸ்வரி அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்து உள்ளார். ஆனால் நிவாரணம் வழங்கப்படவில்லை. இருந்த போதிலும் அவர் பலமுறை அதிகாரிகளிடம் நேரில் சென்று கேட்டபோதும் அவருக்கு நிவாரண தொகை வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. 

அமைச்சர் முன்பு தீக்குளிக்க முயற்சி 

இந்த நிலையில் ஊட்டி அருகே உள்ள குந்தா தாலுகா அலுவலகத்தில் குறைதீர்க்கும் முகாம் கலெக்டர் அம்ரித் தலைமையில் நேற்று மாலை நடந்தது. இந்த முகாமில் தமிழக வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். 

அப்போது இந்த நிகழ்ச்சிக்கு வந்த ராஜேஸ்வரி, அமைச்சர் அருகே சென்றார். பின்னர் அவர் திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த கேனை எடுத்து அதில் இருந்த பெட்ரோலை தன் உடல் மீது ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

போலீசார் கேனை பறித்தனர் 

இதை பார்த்ததும் அமைச்சர், கலெக்டர் மற்றும் அங்கிருந்த அதிகாரிகள், போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அத்துடன் ராஜேஸ்வரி தீப்பெட்டியை எடுத்து தீ பற்ற வைப்பதற்கு முன்பு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் ஓடி வந்து அவரை மீட்டனர். 

பின்னர் போலீசார் ராஜேஸ்வரிக்கு முதலுதவி சிகிச்சை அளித்ததுடன், அவருக்கு தகுந்த அறிவுரை வழங்கினார்கள். அதன் பிறகு அவர் அமைச்சரை சந்தித்து, தாசில்தார் உள்பட பல்வேறு அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்துவிட்டேன். சேதம் அடைந்த வீட்டுக்கு நிவாரணம் வழங்கப் படவில்லை என்று கூறினார். 

புதிய வீடு

உடனே அமைச்சர் ராஜேஸ்வரிக்கு உடனடியாக புதிய வீடு கட்டி கொடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அரசு நிகழ்ச்சியில் அமைச்சர் முன்பு பெண் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 


Next Story