திண்டிவனத்தில் குடோனில் பதுக்கிய ரூ. 2 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல் 2 பேர் கைது


திண்டிவனத்தில் குடோனில் பதுக்கிய ரூ. 2 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்  2 பேர் கைது
x
தினத்தந்தி 14 Dec 2021 10:15 PM IST (Updated: 14 Dec 2021 10:15 PM IST)
t-max-icont-min-icon

திண்டிவனத்தில் குடோனில் பதுக்கிய ரூ.2 லட்சம் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போ லீசார்,இது தொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.

திண்டிவனம், 

திண்டிவனம்  அருகே மரக்காணம் ரோட்டில் உள்ள மன்னார்சாமி கோவில் அருகில் ஒரு குடோனில் தடை செய்யப்பட்ட  குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்கள்  பதுக்கி வைத்திருப்பதாக திண்டிவனம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில்  சப் -இன்ஸ்பெக்டர் ஆனந்தராசன் தலைமையிலான   போலீசார்  விரைந்து சென்று குடோனை சோதனை செய்தனர். அப்போது,  அங்கு  2 பேர்  குட்காவை பதுக்கி வைத்து கொண்டிருந்தனர்.

45 மூட்டைகள் 

இதையடுத்து இருவரையும் போலீசார், சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர். தொடர்ந்து நடந்த சோதனையில் 45 மூட்டைகளில் ஹான்ஸ், ஆர்.டி.எம். உள்ளிட்ட குட்கா புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

 இவைகளை பறிமுதல் செய்த போலீசார், பிடிபட்ட 2 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.  அதில், திண்டிவனம் சர்க்கார் தோப்பு பகுதியை சேர்ந்த பொன்னுராஜ் மகன் செல்வக்குமார் (வயது 35), ராஜஸ்தான் மாநிலம் பாந்தேரி ஜாலூர் மாவட்டத்தை சேர்ந்த ஜெவநாஜி மகன் போச்சாராம் ( 27) என்பதும் தெரியவந்தது. 

2 பேர் கைது

மேலும் கர்நாடக மாநிலத்தில் இருந்து  மொத்தமாக புகையிலை பொருட்களை வாங்கி அதை திண்டிவனம் அருகே உள்ள குடோனுக்கு கொண்டுவந்து, அங்கிருந்து, பல்வேறு கடைகளுக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.  

 இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து,  செல்வக்குமார், போச்சாரம் ஆகியோரை கைது செய்தனர்.   பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மதிப்பு ரூ.2 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே  பறிமுதல் செய்யப்பட்ட  பொருட்களை திண்டிவனம் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு  அபிஷக் குப்தா பார்வையிட்டு, நடவடிக்கை மேற்கொண்ட போலீசாரை பாராட்டினார்.

Next Story