உயர்மட்ட பாலம் அமைக்கக்கோரி சேதமடைந்த தரைப்பாலத்தில் நின்று கிராம மக்கள் போராட்டம் விருத்தாசலம் அருகே பரபரப்பு
உயர்மட்ட பாலம் அமைக்கக் கோரி விருத்தாசலம் அருகே சேதமடைந்த தரைப்பாலத்தில் நின்று கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
விருத்தாசலம்,
ஓடையின் குறுக்கே தரைப்பாலம்
விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே தீவலூர் கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராம மக்கள் மற்றும் தாழநல்லூர், கோனூர், சாத்துக்கூடல் கீழ்பாதி, மேல்பாதி, ஆலிச்சிக்குடி உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் தீவலூர் ஓடையின் குறுக்கே உள்ள தரைப்பாலத்தை கடந்து விருத்தாசலம், பெண்ணாடம் போன்ற நகர்புற பகுதிகளுக்கு சென்று வந்தனர்.
வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது
இந்தநிலையில் கடந்த மாதம் பெய்த தொடர்மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் தீவலூர் ஓடை தரைப்பாலம் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டது. மேலும் அந்த சமயத்தில் ஓடையில் மூழ்கி ஒருவர் உயிரிழந்தார். மேலும் தரைப்பாலத்தை கடந்தபோது வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பள்ளி மாணவர்கள் சிலரை அக்கிராம இளைஞர்கள் மீட்டனர். தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் தீவலூர் ஓடை வழியாக பல்வேறு கிராமங்களுக்கு இயக்கப்பட்ட அரசு மற்றும் தனியார் பஸ்கள் தற்போது இயக்கப்படவில்லை. இதனால் அந்த பகுதி கிராமங்களை சேர்ந்த மக்கள் சிலர் ஆபத்தை உணராமல் ஓடையில் செல்லும் தண்ணீரில் நடந்தபடி ஓடையை கடந்து நகர்புறங்களுக்கு சென்று திரும்பி வருகிறார்கள்.
போலீசார் பேச்சுவார்த்தை
இதனால் பாதிக்கப்பட்ட தீவலூர் கிராம மக்கள் மாவட்ட கலெக்டரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராட்டம் நடத்த முடிவு செய்தனர். அதன்படி கிராம மக்கள் நேற்று காலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த மாயவேல் தலைமையில் ஓடை முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள் ஓடையின் குறுக்கே சேதமடைந்த தரைப்பாலத்தை தற்காலிகமாக சீரமைக்கவேண்டும் எனவும், நிரந்தர தீர்வாக அதே இடத்தில் புதிதாக உயர்மட்ட பாலம் அமைக்கவேண்டும் என்பதை வலியுறுத்தியும் கண்டன கோஷம் எழுப்பியபடி ஓடையில் செல்லும் தண்ணீரில் இறங்கி நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சிலர் சேதமடைந்த தரைப்பாலத்தில் நின்றபடியும் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.
இதுபற்றி தகவல் அறிந்த கருவேப்பிலங்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி, மேம்பாலம் அமைப்பது குறித்து கலெக்டரின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். அதற்கு கிராம மக்கள், தீவலூர் ஓடையை கடந்து செல்ல ஏதுவாக சேதமடைந்த தரைப்பாலத்தை உடனடியாக சீரமைப்பதோடு, அங்கு விரைவில் உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும். இல்லையென்றால் கருவேப்பிலங்குறிச்சி பஸ் நிறுத்தத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம் என கூறிவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story