திண்டிவனத்தில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது
திண்டிவனத்தில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
திண்டிவனம்,
திண்டிவனம் அடுத்த ரோஷணை போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட சந்தைமேடு, அய்யந்தோப்பு பகுதிகளில் வழிப்பறி சம்பவங்கள் நடந்து வந்தது.
கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு கோவிந்தசாமி அரசு கலைக்கல்லூரி அருகே ஒரு நபரிடம் மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் பறித்து சென்றனர். வழிப்பறி சம்பவங்கள் தொடர்பான புகார்களின் அடிப்படையில் ரோஷணை போலீசார் தனித்தனியாக வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை தேடி வந்தனர்.
2 பேரிடம் விசாரணை
நேற்று அதிகாலை ரோஷணை சப்-இன்ஸ்பெக்டர் வினோத்ராஜ் தலைமையிலான போலீசார், கோவிந்தசாமி அரசு கலைக்கல்லூரி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை நிறுத்தி, விசாரித்தனர். ஆனால் அவர்களிடம் மோட்டார் சைக்கிளுக்கு உரிய ஆவணங்கள் இல்லை. மேலும் முன்னுக்கு பின் முரணான பதிலை அளித்தனர்.
இதையடுத்து சந்தேகத்தின் பேரில் அவர்களை, போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.
அதில் உளுந்தூர்பேட்டை தாலுகா சீயமங்கலம் பகுதியை சேர்ந்த முருகானந்தம் மகன் புகழ்வாணன் (வயது 23), சென்னை ஊரப்பாக்கத்தை சேர்ந்த அய்யப்பன் மகன் பார்த்திபன் (22) என்பதும் தெரியவந்தது.
கைது
கடந்த சில மாதங்களாக சந்தைமேடு, அய்யந்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் நடந்து செல்பவர்களிடம் கத்தியை காட்டி, மிரட்டி நகை, பணம், மோட்டார் சைக்கிளை வழிபறி செய்து வந்ததாக, போலீசில் அவர்கள் ஒப்புக்கொண்டனர்.
இதையடுத்து 2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 10 பவுன் நகை, ஒரு செல்போன், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
Related Tags :
Next Story