பிரதமர் வீடுவழங்கும் திட்ட பயனாளிகளை அதிகரிக்க கலெக்டர் அமர்குஷ்வாஹா உத்தரவு


பிரதமர் வீடுவழங்கும் திட்ட பயனாளிகளை அதிகரிக்க கலெக்டர் அமர்குஷ்வாஹா உத்தரவு
x
தினத்தந்தி 14 Dec 2021 10:28 PM IST (Updated: 14 Dec 2021 10:28 PM IST)
t-max-icont-min-icon

ஏலகிரிமலை ஊராட்சியில் பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தில் பயனாளிகள் எண்ணிக்கையை அதிகரிக்க கலெக்டர் அமர்குஷ்வாஹா உத்தரவிட்டுள்ளார்.

ஜோலார்பேட்டை

ஏலகிரிமலை ஊராட்சியில் பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தில் பயனாளிகள் எண்ணிக்கையை அதிகரிக்க கலெக்டர் அமர்குஷ்வாஹா உத்தரவிட்டுள்ளார்.

கலெக்டர் ஆய்வு

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த ஏலகிரி மலை ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் சுற்றுலாத் தலமாகும். 14 சிறிய கிராமங்களை உள்ளடக்கி ஏலகிரி மலை தனி ஊராட்சியாக செயல்பட்டு வருகிறது. மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா ஏலகிரி மலையில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். 

அப்போது ஏலகிரி மலை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பல்வேறு பதிவேடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனையடுத்து புத்தூர் பகுதியிலுள்ள மண்புழு உரம் தயாரிக்கும் பணியை பார்வையிட்டார். மேலும் மஞ்சங்கொல்லை புதூர் கிராமத்தில் கனமழையின் காரணமாக சேதமடைந்துள்ள மேம்பாலத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து ஏலகிரி மலையில் குப்பை கழிவுகளை சேகரிக்கும் குப்பைக்கிடங்கிற்கு சென்று ஆய்வு செய்து குப்பைகளை தரம் பிரிக்கும் இயந்திரம் அமைப்பதற்கான திட்டப்பணிகள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார். 

அதிகரிக்க உத்தரவு

மேலும் ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்று ஏலகிரி மலையிலும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் சோதனை சாவடி அமைத்து தடுப்பூசி செலுத்தாமல், முக கவசம் அணியாமல் வருபவர்களுக்கு அபராதம் விதித்து, அபராதத் தொகையை ஊராட்சி வளர்ச்சிக்கு பயன்படுத்தவும், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வருபவர்களுக்கும், வினியோகம் செய்பவர்களுக்கும் அபராதம் விதிக்கவும் உத்தரவிட்டார்.
செயல்படாமல் உள்ள 100 நாள் வேலைவாய்ப்பை செயல்படுத்தவும், பிரதமர் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகள் எண்ணிக்கையை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

ஆய்வின் போது வட்டார வளர்ச்சி அலுவலர் விநாயகம், உதவி பொறியாளர் பூபாலன், ஊராட்சி மன்றத் தலைவர் ராஜஸ்ரீ கிரி வேலன், துணை தலைவர் அ.திருமால், ஊராட்சி செயலாளர் சண்முகம் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Next Story