ராசிபுரம் அருகே கோவில் நிலத்தை ஏலம் விட எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திடீர் சாலைமறியல்
ராசிபுரம் அருகே கோவில் நிலத்தை ஏலம் விட எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ராசிபுரம்:
கோவில் நிலத்தை ஏலம் விட எதிர்ப்பு
ராசிபுரம் அருகே குட்டலாடம்பட்டி கிராமத்தில் கல்லமலை பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலம் மலையம்பாளையம் கிராமத்தில் உள்ளது. கோவில் அர்ச்சகராக ரமேஷ் என்பவர் பணியாற்றி வருகிறார். நிலத்தை உழவடை செய்து அதன் மூலம் வரும் வருமானத்தை வைத்து வாழ்க்கையை நடத்தி வருகிறார்.
இந்தநிலையில் இந்து சமய அறநிலைத்துறையினர் கோவில் நிலத்தை குத்தகைக்கு ஏலம் விட போவதாகவும், எனவே நிலத்தையும், கோவில் சாவியையும் ஒப்படைக்க வேண்டும் என்று அர்ச்சகர் ரமேசிடம் கூறியதாக தெரிகிறது. இதற்கு கோவில் அர்ச்சகர் ரமேஷ் மற்றும் கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சாலை மறியல்
இந்தநிலையில் நேற்று அவர்கள் திடீரென குட்டலாடம்பட்டி பஸ் நிறுத்தம் அருகே சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் ராசிபுரம்-பனமரத்துப்பட்டி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், இன்ஸ்பெக்டர் சுகவனம் மற்றும் போலீசார் சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் இந்து சமய அறநிலையத்துறையினரிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story