பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்தது
குமரி மாவட்டத்தில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்துள்ளது என்று கலெக்டர் அரவிந்த் கூறினார்.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்துள்ளது என்று கலெக்டர் அரவிந்த் கூறினார்.
கலந்தாய்வு கூட்டம்
பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் முன்னேற்றத்திற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்களுடன் கலந்தாய்வுக்கூட்டம் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் பல மாவட்டங்களில் பெண் குழந்தை பிறப்பு விகிதம், ஆண் குழந்தைகளோடு ஒப்பிடும் போது மிகவும் குறைவாக உள்ளது. குறிப்பாக குமரி மாவட்டத்தில் 2018-2019 கணக்கெடுப்பின்படி 1000 ஆண் குழந்தைகளுக்கு 934 பெண் குழந்தைகள் மட்டுமே பிறக்கின்றனர். நம் அண்டை மாநிலமான கேரளத்தில் 1000 ஆண்களுக்கு 1084 பெண்கள் இருப்பதாக கணக்கெடுப்பில் தெரிய வருகிறது. குமரி மாவட்டத்தில், பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதம் கடந்த 10 ஆண்டுகளில் தொடர்ந்து இறங்குமுகத்திலேயே இருந்து வருவதாக தெரிகிறது.
குழு அமைப்பு
இதை தடுக்கும் விதத்திலும், பெண் குழந்தைகள் பிறப்பு விகிதத்தை முன்னேற்ற வழிமுறைகளை ஆராய்ந்து செயல்படுத்த மத்திய அரசின் பி.சி.பி.என்.டி.டி. சட்டம் - 2-ஐ அடிப்படையாகக் கொண்ட ஒரு முன்னோடி திட்டம் குமரி மாவட்டத்தில் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. செயல்பாட்டை கண்காணிக்க மாவட்ட கலெக்டர் (என்) தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. கலெக்டர் தலைவராகவும், இணை இயக்குனர் (மருத்துவம்) உறுப்பினர் செயலாளராகவும், துணை இயக்குனர் (மருத்துவம்) உறுப்பினராகவும், சிறப்பு உறுப்பினர்களாக டாக்டர்கள் ஆஷா ஜென்கின்ஸ், டாக்டர் சரண்யா ஆண்டாள், ஆன் ஜெனிட்டா ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
மேற்படி குழு உறுப்பினர்கள் அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், ஸ்கேன் நிலையங்கள், செயற்கை கருத்தரிப்பு மையங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்ய வேண்டும். ஆய்வில் அரசு விதிகளை மீறி கருவில் பாலினம் கண்டறியப்படுகிறதா? பெண் கருக்கள் கருக்கலைப்பு செய்யப்படுகிறதா? என்பது போன்ற அடிப்படை விஷயங்கள் மற்றும் விதிப்படி அனைத்து மருத்துவமனைகள், ஸ்கேன் சென்டர்கள் மற்றும் செயற்கை கருத்தரிப்பு மையங்கள் செயல்படுகின்றதா? என்பவையும் கண்டறியப்படும். விதிமுறைகள் மீறப்பட்டிருந்தால் விதிப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர் நடவடிக்கை
சிறப்புகுழுவினர் கடந்த ஆகஸ்டு மாதம் முதல் இதுவரை 18 தனியார் மருத்துவமனைகள், 12 ஸ்கேன் சென்டர்கள், 5 ஜெனிட்டிக் கிளினிக்குகள், 2 செயற்கை கருத்தரிப்பு மையங்களை ஆய்வு செய்துள்ளனர். ஆய்வறிக்கை மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெறும் ஆய்வுக்கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, விவாதிக்கப்படுகிறது. இந்த கூட்டத்தில் தனியார் மருத்துவமனை டாக்டர்களும் கலந்து கொள்கின்றனர்.
பெண் குழந்தை பிறப்பு விகித முன்னேற்றத்திட்டம் - 2021 குமரி மாவட்டத்தின் ஒரு முன்னோடி திட்டமாகும். இத்திட்டத்தின் சிறப்பான செயல்முறைகளால் குமரி மாவட்டத்தில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் அதிகரிக்க தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு கலெக்டர் அரவிந்த் கூறினார்.
Related Tags :
Next Story