பச்சிளம் பெண் குழந்தை மீட்பு


பச்சிளம் பெண் குழந்தை மீட்பு
x
தினத்தந்தி 15 Dec 2021 1:07 AM IST (Updated: 15 Dec 2021 1:07 AM IST)
t-max-icont-min-icon

முசிறி அரசு மருத்துவமனையில் கழிவுநீர் தொட்டி அருகே கிடந்த பிறந்து சில மணிநேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தை மீட்கப்பட்டது.

முசிறி, டிச.15-
முசிறி அரசு மருத்துவமனையில் கழிவுநீர் தொட்டி அருகே கிடந்த பிறந்து சில மணிநேரமே ஆன பச்சிளம் பெண் குழந்தை மீட்கப்பட்டது.
பச்சிளம் பெண் குழந்தை
 திருச்சி மாவட்டம் முசிறி அரசு மருத்துவமனையில் பொதுவார்டு, அவசர சிகிச்சை வார்டு, மகப்பேறு வார்டு உள்ளிட்ட பல்வேறு வார்டுகள் உள்ளன. முசிறி மற்றும் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான கிராம மக்கள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
 இந்நிலையில் நேற்று இந்த மருத்துவமனை வளாகத்தின் பின்புறம் உள்ள கழிவுநீர் தொட்டியின் மேலே துணி பை ஒன்று இருந்தது. அந்த பையில் இருந்து சற்று அசைவு தென்பட்டதால், அந்த வழியாக சென்ற மருத்துவமனை ஊழியர் பையை திறந்து பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தார். அந்த பைக்குள் தொப்புள்கொடி ஈரம் கூடகாயாத நிலையில் பச்சிளம் பெண் குழந்தை இருந்துள்ளது.
பின்னர் இதுகுறித்து தலைமை மருத்துவர் ஸ்ரீகாந்துக்கு அந்த ஊழியர் தகவல் தெரிவித்தார். இதையடுத்து பணியில் இருந்த டாக்டர்கள் குழந்தையை மீட்டு உடனடியாக அவசர சிகிச்சை அளித்து பத்திரமாக இன்குபேட்டரில் வைத்தனர். பின்னர் முசிறி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர்கள் பானுமதி, மாலிக் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர்.
தாய்க்கு வலைவீச்சு
மருத்துவமனையில் இருந்த  கண்காணிப்பு கேமரா காட்சிகளை கைப்பற்றியும், மருத்துவமனை வளாகத்தில் இருந்தவர்களிடம் விசாரணையும் மேற்கொண்டனர். மேலும் மருத்துவமனையில் பிரசவித்த பெண்கள் குறித்து கணக்கெடுத்து, குழந்தையை வீசி சென்ற கல்நெஞ்சம் கொண்ட தாயை போலீசார் தேடி வருகின்றனர்.
மேலும் அந்த பெண்குழந்தை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கிருந்து திண்டுக்கல்லில் செயல்பட்டு வரும் தொட்டில் குழந்தை திட்டம் காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்படும் என மருத்துவ வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

Next Story