கர்நாடக மேல்-சபை தேர்தல் முடிவு வெளியானது; பா.ஜ.க.-காங். தலா 11 இடங்களில் வெற்றி


கர்நாடக மேல்-சபை தேர்தல் முடிவு வெளியானது; பா.ஜ.க.-காங். தலா 11 இடங்களில் வெற்றி
x
தினத்தந்தி 15 Dec 2021 3:00 AM IST (Updated: 15 Dec 2021 3:00 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் 25 மேல்-சபை தொகுதிகளுக்கான தேர்தல் முடிவு நேற்று வெளியானது. இதில் பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தலா 11 இடங்களில் வெற்றி பெற்றன. அதுபோல் ஜனதாதளம் (எஸ்) 2 தொகுதிகளில் வெற்றியை ருசித்தது.

பெங்களூரு: கர்நாடகத்தில் 25 மேல்-சபை தொகுதிகளுக்கான தேர்தல் முடிவு நேற்று வெளியானது. இதில் பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தலா 11 இடங்களில் வெற்றி பெற்றன. அதுபோல் ஜனதாதளம் (எஸ்) 2 தொகுதிகளில் வெற்றியை ருசித்தது. 

25 தொகுதிகளுக்கு தேர்தல்

75 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக மேல்-சபையில் 25 தொகுதிகளின் உறுப்பினர்கள் பதவிக்காலம் ஜனவரி மாதம் 5-ந்தேதி நிறைவடைகிறது. அதாவது விஜயாப்புரா, பெலகாவி, தார்வார், தட்சிண கன்னடா மற்றும் மைசூரு ஆகிய மாவட்டங்களில் தலா 2 தொகுதிகளும், பீதர், கலபுரகி, உத்தரகன்னடா, ராய்ச்சூர், பல்லாரி, சித்ரதுர்கா, சிவமொக்கா, சிக்கமகளூரு, ஹாசன், துமகூரு, மண்டியா, பெங்களூரு, பெங்களூரு புறநகர், கோலார் மற்றும் குடகு ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு தொகுதி வீதம் மொத்தம் 25 இடங்கள் காலியாகின்றன. இந்த 25 இடங்களில் தற்போது காங்கிரஸ் வசம் 13 தொகுதிகளிலும், பா.ஜனதா வசம் 6 தொகுதிகளும், ஜனதா தளம் (எஸ்) வசம் 4 தொகுதிகளும் உள்ளன. சுயேச்சைகள் 2 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்தனர். 

 இந்த நிலையில் அந்த 25 இடங்களுக்கு கடந்த 10-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் 90 வேட்பாளர்கள் போட்டியிட்டு இருந்தனர். அதில் பெண் வேட்பாளர் ஒருவர் மட்டுமே உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆளும் பா.ஜனதா மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தலா 20 தொகுதிகளிலும், ஜனதா தளம் (எஸ்) கட்சி 6 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி 3 தொகுதிகளிலும் போட்டியிட்டன. அரசியல் கட்சிகள் மட்டுமின்றி சுயேச்சை வேட்பாளர்கள் 30 பேர் களத்தில் உள்ளனர். இந்த தேர்தலில் 99.50 சதவீத வாக்குகள் பதிவாயின.

முன்னணி நிலவரம்

இந்த வாக்குகள் அடங்கிய பெட்டிகள், 20 மாவட்டங்களிலும் அந்தந்த வாக்கு எண்ணிக்கை மையங்களில் வைக்கப்பட்டு இருந்தன. அந்த மையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் மேல்-சபை தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கின. காலை 10 மணி முதல் வேட்பாளர்களின் முன்னணி நிலவரம் வெளிவர தொடங்கியது. முதலில் ஹாசன் தொகுதியில் ஜனதா தளம் (எஸ்) வேட்பாளர் சூரஜ் ரேவண்ணா வெற்றி பெற்றார்.

அதைத்தொடர்ந்து பிற தொகுதிகளின் முடிவும் ஒவ்வொன்றாக அறிவிக்கப்பட்டன. ஓட்டு எண்ணிக்கையின் முடிவில் ஆளும் பா.ஜனதா 11 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 11 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. ஜனதா தளம் (எஸ்) கட்சி ஹாசன், மைசூரு ஆகிய 2 தொகுதிகளில் வெற்றி பெற்றன. பெலகாவியில் 2-வது தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்ட முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளியின் இளைய சகோதரர் லகான் ஜார்கிகோளி வெற்றி பெற்றார். பெலகாவியில் முதல் தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. அதில் ஆளும் பா.ஜனதா தோல்வியை தழுவியது.

வெற்றி பெற்றவர்கள் 

25 தொகுதிகளுக்கு நடைபெற்ற தொகுதிகளில் ஆளும் பா.ஜனதா, பெங்களூரு நகர் தொகுதியில் வேட்பாளர் கோபிநாத்ரெட்டி, குடகு-மடிக்கேரி தொகுதியில் சுஜா குசாலப்பா, சிவமொக்காவில் அருண், சித்ரதுர்காவில் கே.எஸ்.நவீன், பல்லாரியில் ஒய்.எம்.சதீஸ், உத்தரகன்னடாவில் கணபதி ஊல்வேகர், சிக்கமகளூருவில் எம்.கே.பிரானேஷ், உடுப்பி-தட்சிணகன்னடாவில் கோட்டா சீனிவாச பூஜாரி, கலபுரகியில் பி.ஜி.பட்டீல், உப்பள்ளி-தார்வாரில் பிரதீப்ஷெட்டர், விஜயாப்புராவில் பி.எச்.பூஜார் ஆகிய 11 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

அதே போல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டவர்களில் பீதர் தொகுதியில் பீம்ராவ் பட்டீல், துமகூருவில் ராஜஜேந்திரா ராஜண்ணா, கோலாரில் எம்.எல்.அனில்குமார், விஜயாப்புராவில் சுனில்கவுடா பட்டீல், உப்பள்ளி-தார்வாரில் சலீம் அகமது, ராய்ச்சூரில் சரண்கவுடா பட்டீல், மண்டியாவில் தினேஷ் கோலிகவுடா, மைசூருவில் டி.திம்மையா, உடுப்பியில் மஞ்சுநாத் பண்டாரி, பெலகாவியில் சன்னராஜூ, பெங்களூரு புறநகரில் எஸ்.ரவி ஆகிய 11 பேர் வெற்றி பெற்றுள்ளனர். 

2 தொகுதிகளில்...

ஹாசன் தொகுதியில் ஜனதா தளம் (எஸ்) வேட்பாளர் சூரஜ் ரேவண்ணாவும், மைசூரு தொகுதியில் சி.என்.மஞ்சேகவுடாவும் வெற்றி பெற்றுள்ளனர். சூரஜ் ரேவண்ணா தேவேகவுடாவின் பேரன் என்பது குறிப்பிடத்தக்கது. பெலகாவியில் சுயேச்சையாக போட்டியிட்ட முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளியின் சகோதரர் லகான் ஜார்கிகோளி வெற்றி பெற்றார். 11 தொகுதிகளில் வெற்றி பெற்றாலும் மேல்-சபையில் பா.ஜனதாவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஆனால் லகான் ஜார்கிகோளியின் ஆதரவு பா.ஜனதாவுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Next Story