‘தினத்தந்தி’ புகார் பெட்டி
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 91761 28888 என்ற வாட்ஸ்-அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
நாய் தொல்லை
நெல்லை டவுண் தொண்டர் சன்னதியில் இருந்து ராமையன்பட்டி சாலை, சாலியர் தெரு வரையிலும் நாய்கள் கூட்டமாக சுற்றித் திரிகின்றன. இதனால் வாகன ஓட்டிகளை துரத்துவது மட்டுமல்லாமல் நடந்து செல்பவர்ளை கடிக்க வருவது போன்று பயமுறுத்துகிறது. குறிப்பாக பள்ளிக்குழந்தைகள் நடந்து செல்ல அச்சப்படுகின்றனர். எனவே, நாய்களை பிடித்துச் செல்ல மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-இசைவாணி, நெல்லை டவுண்.
அபாய மின்கம்பம்
நெல்லை மாவட்டம் ராதாபுரம் தாலுகா குட்டம் கிராமத்தை சேர்ந்த கூட்டப்பனை மெயின் ரோடு நடுத்தெருவில் அமைந்துள்ள மின்கம்பமானது, காங்கிரீட் பெயர்ந்து உடைந்த நிலையில் உள்ளது. குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ளதால் பொதுமக்கள் நடமாட அச்சப்படுகின்றனர். எனவே, அந்த அபாய மின்கம்பத்தை மாற்றுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.
-சி.அந்தோணி சேவியர், கூட்டப்பனை.
கிணறு தூர்வாரப்படுமா?
தென்காசி மாவட்டம் கடையம் அருகே சேர்வைக்காரன்பட்டி தெற்கு தெருவில் கிணறு ஒன்று உள்ளது. 7 வருடங்களுக்கு முன்பு வரை மக்கள் பயன்பாட்டில் இருந்த கிணறு தற்போது குப்பை கொட்டும் குப்பை கிணறாக மாறி விட்டது. இதனால் துர்நாற்றம் வீசுவது மட்டுமல்லாமல் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே, கிணற்றை தூர்வாரி மீண்டும் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-தரூஸ், சேர்வைக்காரன்பட்டி.
குடிநீர் உறிஞ்சும் மின்மோட்டார்கள்
குற்றாலம் குடியிருப்பு ராயர் தோப்பு பகுதியில் மின்மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சுகின்றனர். இதனால் மற்ற குடும்பங்கள் குடிக்க கூட தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். எனவே, மின்மோட்டார்களை அகற்றவும், அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் சீராக கிடைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ரசூல் மைதீன், குடியிருப்பு.
சுகாதாரக்கேடு
சங்கரன்கோவில் தாலுகா மேலநீலிதநல்லூர் யூனியன் சேர்ந்தமரம் கஸ்பா பஞ்சாயத்து பாட்டக்குளம் கரையின் மேல்புறம் நெடுஞ்சாலைகள் மற்றும் நான்கு முக்கு சாலைகள் அமைந்துள்ளன. அந்த பகுதியில் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் சென்று வரும் நிலையில், குளத்தின் கரையில் பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் குப்பைகள் கொட்டப்பட்டு கிடக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுவதால் சுகாதாரக்கேடு நிலவுகிறது. எனவே, குப்பைகளை அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.
-கே.எம்.மணிகண்டன், சேர்ந்தமரம்.
நூலக வசதி ஏற்படுத்தப்படுமா?
கடையநல்லூர் தாலுகா சேர்ந்தமங்கலம் மஜரா பஞ்சாயத்துக்கு உட்பட்ட கடம்பன்குளம் கிராமத்தில் நூலக கட்டிடம் உள்ளது. ஆனால் அந்த கட்டிடத்தில் எந்தவித புத்தகமும் வைக்கப்படவில்லை. மேலும் அதனை பராமரிப்பதற்கு பணியாளர்களும் நியமிக்கப்படவில்லை. தற்போது அந்த கட்டிடம் மினி கிளீனிக்காக செயல்பட்டு வருகிறது. எனவே, பள்ளி மாணவர்களின் பொது அறிவுத்திறனை வளர்க்க ஏதுவாக நூலக வசதி ஏற்படுத்திக் கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-ராஜேஷ்குமார், கடம்பன்குளம்.
மின்விளக்கு எரியவில்லை
கடையம் யூனியன் முதலியார்பட்டி பஞ்சாயத்து முதலியார்பட்டி பஸ்நிறுத்தத்தில் அமைந்துள்ள பயணியர் நிழற்குடையின் உள்ளேயும், வெளியேயும் மின்விளக்குகள் கடந்த சில நாட்களாக எரியவில்லை. இதனால் இரவு நேரத்தில் பஸ்நிறுத்த பகுதி இருளில் மூழ்கி கிடக்கிறது. அங்கு பஸ்சுக்காக காத்திருக்கும் பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். எனவே, மின்விளக்குகள் எரிவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அம்ஜத், முதலியார்பட்டி.
சாலையின் நடுவே மின்கம்பம்
தூத்துக்குடி மாநகராட்சி பகுதியை சேர்ந்த டீச்சர் காலனியில் கடந்த 6 மாதங்களுக்கு புதிதாக சாலைகள் அமைக்கப்பட்டது. ஆனால் மின்கம்பங்களை அகற்றாமல் அப்படியே விடப்பட்டுள்ளதால், ரோட்டின் நடுவே மின்கம்பம் அமைந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகளுக்கு பெரிதும் இடையூறாக உள்ளது. எனவே, மின்கம்பங்களை அகற்றி சாலையின் ஓரம் மாற்றியமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
-சண்முக முத்து, டீச்சர் காலனி.
பூட்டிக்கிடக்கும் நூலகம்
தூத்துக்குடி புதுக்கோட்டை மெயின் ரோடு பகுதியில் கடந்த 7 வருடங்களுக்கு முன்பு நூலகம் கட்டப்பட்டது. ஆனால் இதுவரை திறக்கப்படாமல் பூட்டியே கிடக்கிறது. எனவே, பள்ளிக்கூட மாணவர்கள் தங்களது வாசிப்புத்திறன் மற்றும் பொது அறிவுத் திறனை மேம்படுத்த நூலகத்தை திறப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்கிறேன்.
-ராமன், புதுக்கோட்டை.
Related Tags :
Next Story