பாளையக்காடு பகுதியில் நேற்று காலை கடுமையான போக்குவரத்து நெரிசல்


பாளையக்காடு பகுதியில் நேற்று காலை கடுமையான போக்குவரத்து நெரிசல்
x
தினத்தந்தி 15 Dec 2021 10:22 PM IST (Updated: 15 Dec 2021 10:22 PM IST)
t-max-icont-min-icon

பாளையக்காடு பகுதியில் நேற்று காலை கடுமையான போக்குவரத்து நெரிசல்

திருப்பூர்,
திருப்பூர் ஊத்துக்குளி ரோடு பாளையக்காடு பகுதியில் நேற்று காலை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் திக்குமுக்காடி போயினர்.
வாகனங்கள் அதிகரிப்பு
திருப்பூர் மாநகரில் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் பிரதான ரோடுகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. அந்த வகையில் திருப்பூர் ஊத்துக்குளி ரோட்டிலும் வாகனங்களின் எண்ணிக்கை பெருமளவில் உயர்ந்துள்ளது. கடந்த காலங்களில் இந்த ரோட்டில் எப்போதாவது வாகனங்கள் அதிகமாக செல்லும். ஆனால் இ்ப்போது தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த வழியாக செல்கின்றன. ஊத்துக்குளி, ஈரோடு ஆகிய பகுதிகளுக்கும், அங்கிருந்து திருப்பூருக்கு வரும் வாகனங்களும் அதிக அளவில் செல்கின்றன. இதில் கனரக வாகனங்களும் கணிசமான அளவில் செல்கின்றன.
போக்குவரத்து நெரிசல்
இதுமட்டுமின்றி மாநகருக்குள்ளாக மட்டும் பயணிக்கும் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிக அளவில் உள்ளது. ஊத்துக்குளி ரோடு சுற்றுவட்டார பகுதியில் பனியன் நிறுவனங்கள் அதிகமாக இருப்பதால் பனியன் தொழில் சார்ந்த வாகனங்களும் அதிகமாக இயக்கப்படுகிறது.  குறிப்பாக பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்களுக்கு செல்பவர்களின் வாகனங்களும் அதிகமாக வருவதால் காலை, மாலை நேரங்களில் இந்த ரோட்டில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. நேற்று காலை சுமார் 9 மணியளவில் பாளையக்காடு நால்ரோடு பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. வாகனங்கள் நகர்ந்து செல்வதற்கு வழியின்றி ஊர்ந்தபடி சென்றன. 
களமிறங்கிய வாலிபர்கள்
கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு வாகனங்கள் நாலாபுறமும் இருந்து வந்ததால் அங்கு பணியில் இருந்த ஒரு போலீஸ்காரர் வாகனங்களை ஒழுங்குபடுத்த சிரமப்பட்டு கொண்டிருந்தார். இதையடுத்து அங்கு நின்ற வாலிபர்கள் சிலர் ரோட்டில் இறங்கி வாகனங்களை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் மேலும் இரண்டு போலீசார் அங்கு வந்து போக்குவரத்தை ஒழுங்குபடுத்தினார்கள். சுமார் ½ மணி நேரம் இங்கு நீடித்த போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் திக்குமுக்காடி போனார்கள். இந்த ரோட்டில் காலை நேரங்களில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதும், பொதுமக்கள் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதும் வாடிக்கையான விஷயமாக உள்ளது. 
எனவே, இங்கு காலை மற்றும் மாலை நேரங்களில் அதிகமான போலீசாரை பணியில் நிறுத்துவதற்கும், இங்கு போக்குவரத்து சிக்னல் அமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது இப்பகுதியினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Next Story