கூரியர் மூலம் கடத்திய 22 கிலோ கஞ்சா சிக்கியது
ஆந்திராவில் இருந்து தேனிக்கு கூரியர் மூலம் கடத்திய 22 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தேனி:
போலி பீடி மூட்டைகள்
தேனி மாவட்டத்தில் கூரியர் மற்றும் பார்சல் நிறுவனங்கள் மூலமாக கஞ்சா, குட்கா போன்ற பொருட்கள் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல்கள் கிடைத்தன. இதையடுத்து இதுபோன்ற நடவடிக்கையை கண்காணிக்கவும், சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே உத்தரவின்பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தனிப்படை போலீசார் தேனி அரண்மனைப்புதூர் விலக்கு பகுதியில் உள்ள ஒரு தனியார் கூரியர் நிறுவனத்தில் வந்த பார்சல்களை நேற்று திடீர் சோதனையிட்டனர். அப்போது 3 சாக்கு மூட்டைகளில் பீடி பண்டல்கள் இருந்தன. அவை ஒரு தனியார் நிறுவனத்தின் பெயரில் போலியாக தயாரிக்கப்பட்ட பீடிகள் என தெரியவந்தது.
இதையடுத்து அந்த 3 மூட்டை பீடிகளையும் போலீசார் பறிமுதல் செய்து தேனி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அந்த மூட்டைகளை அனுப்பிய நபர்கள் யார்?, அவை யாருக்காக அனுப்பப்பட்டது போன்ற விவரங்களை சேகரித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
22 கிலோ கஞ்சா
இதைத்தொடர்ந்து தேனியில் உள்ள மற்ற கூரியர் அலுவலகங்களிலும் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது தேனி சுப்பன் தெரு திட்டச் சாலையில் உள்ள ஒரு தனியார் கூரியர் நிறுவனத்தில் 2 அட்டைப் பெட்டிகளில் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றில் 10 பண்டல்களில் மொத்தம் 22 கிலோ கஞ்சா இருந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கஞ்சா இருந்த பார்சல் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து கம்பத்தில் உள்ள ஒரு கடையின் முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளது தெரியவந்தது. ஆனால் அனுப்பியவரின் செல்போனிலும், அதை பெறும் நபரின் செல்போன் எண்ணும் ஒன்றாக இருந்தது.
இதையடுத்து கம்பத்தில் உள்ள சம்பந்தப்பட்ட கடைக்கு போலீசார் சென்று விசாரித்தனர். ஆனால் அந்த கடைக்காரருக்கும் கஞ்சா பார்சலுக்கும் சம்பந்தமில்லை என்று தெரியவந்தது. இதனால் இந்த கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட நபர் குறித்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story