டயர், இரும்பு பொருட்கள் திருடிய டிரைவர்கள் 2 பேர் கைது
மன்னார்குடி அருகே லாரிகளில் இருந்து டயர் மற்றும் இரும்பு பொருட்கள் திருடிய டிரைவர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
மன்னார்குடி:
மன்னார்குடி அருகே லாரிகளில் இருந்து டயர் மற்றும் இரும்பு பொருட்கள் திருடிய டிரைவர்கள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார்
மன்னார்குடி ஹரித்ராநதி தெப்பக்குளம் பகுதியில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகானந்தம், மதி மற்றும் போலீசார் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த பகுதியில் உள்ள பழைய இரும்பு கடையில் சந்தேகத்திற்கு இடமான வகையில் இரும்பு பொருட்களை விற்க முயன்ற 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் மன்னார்குடி அடுத்த உள்ளூர் வட்டம் பகுதியை சேர்ந்த பிரவீன் (வயது 20) என்பதும், மன்னார்குடி அடுத்த குருவைமொழி பகுதியை சேர்ந்த பாலாஜி (21) என்பதும், இவர்கள் 2 பேரும் சரக்கு வேன் டிரைவர்கள் என்பதும் தெரியவந்தது.
டிரைவர்கள் 2 பேர் கைது
மேலும் இவர்கள் சாலையோரம் நிற்கும் லாரிகளில் உள்ள பொருட்களை திருடி விற்று வந்ததும், கடந்த ஜூன் 23-ந் தேதி மன்னார்குடி தீயணைப்பு நிலையம் அருகே நிறுத்தி இருந்த லாரியில் இருந்து ரூ.3 ஆயிரம் மதிப்புள்ள காப்பர் வயர்களை திருடியதும், மன்னார்குடி அருகே நீடாமங்கலம் ரோட்டில் மாசாணியம்மன் கோவில் அருகே நின்றிருந்த லாரியில் இருந்து ரூ.30 ஆயிரம் மதிப்பிலான டயர்கள் மற்றும் இரும்பு பொருட்களை திருடியதும் தெரிய வந்தது.
இதனையடுத்து மன்னார்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, 2 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து டயர் மற்றும் இரும்பு பொருட்களை பறிமுதல் செய்தனர். பின்னர் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story