தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 28 லட்சத்தை நெருங்குகிறது
மதுரை மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 28 லட்சத்தை நெருங்குகிறது.
மதுரை,
மதுரை மாவட்டத்தில் தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 28 லட்சத்தை நெருங்குகிறது.
கொரோனா தடுப்பூசி
தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருகிறது. தடுப்பூசி செலுத்தப்பட்ட பின்னரே பாதிப்புகள் படிப்படியாக குறைய தொடங்கியது. முன்பை விட தற்போது கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. முதற்கட்டமாக முன்களப்பணியாளர்களான தூய்மைப் பணியாளர்கள், டாக்டர்கள், செவிலியர்கள், காவல்துறை சார்ந்தவர்கள் உள்ளிட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. தற்போது 18 வயது நிரம்பியவர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையே, தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தும் விதமாக அவ்வப்போது மெகா தடுப்பூசி முகாமை அரசு நடத்தி வருகிறது. அந்த முகாம்களில் இதுவரை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள், 2-வது தவணை தடுப்பூசி செலுத்துவோர் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டு தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். மதுரையில் தடுப்பூசி செலுத்தியவர்களின் மொத்த எண்ணிக்கை 28 லட்சத்தை நெருங்கி வருகிறது.
28 லட்சம்
தென் மாவட்டங்களை ஒப்பிடும் போது மதுரையில் அதிக மக்கள் தடுப்பூசி செலுத்தி இருக்கிறார்கள். மதுரை மாவட்டத்தில் நேற்றைய நிலவரப்படி 27 லட்சத்து 90 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், மதுரையில் நடந்த சிறப்பு முகாம்கள் மூலம் இந்த இலக்கை அடைய முடிந்தது. மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சியும் தடுப்பூசி செலுத்துவது குறித்து பல்வேறு வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தியது. அதன் மூலமே அதிக அளவில் மக்கள் தடுப்பூசி செலுத்த முடிந்துள்ளது.
85 சதவீத மக்கள் தடுப்பூசி செலுத்தி விட்டதால், தடுப்பூசி செலுத்தாதவர்கள் யார், யார் என்பது குறித்து கண்டறியும் பணியும் நடக்கிறது. மேலும், வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தும் பணியும் நடந்து வருகிறது. தடுப்புசி செலுத்தி கொள்வதன் மூலம் எந்தவித பாதிப்பும் ஏற்படுவதில்லை. எனவே தகுதியுள்ள அனைவரும் ஆதார் அட்டையை காண்பித்து தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும்.
பொதுமக்களின் வசதிக்காக அரசு மருத்துவ கல்லூரி, அரசு ஆஸ்பத்திரிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாவட்ட சுகாதார கிடங்கில் 2½ லட்சத்துக்கும் அதிகமாக தடுப்பூசிகள் கையிருப்பு வைக்கப்பட்டு உள்ளது.
அலட்சியம் வேண்டாம்
தற்போது கொரோனா வைரசின் உருமாறிய பரவல் வேகம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் பொது இடங்களுக்கு செல்லும்போது கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து இருக்கவேண்டும். தடுப்பூசி செலுத்தி விட்டோம் என்ற எண்ணத்தில் அலட்சியமாக இருந்தால் கொரோனா பாதிக்க நேரிடும். எனவேபொது இடங்களுக்கு செல்லும்போது கண்டிப்பாக முக கவசம் அணிந்தபடி சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story