சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தங்கத்தேரோட்டம்


சமயபுரம் மாரியம்மன் கோவிலில்  தங்கத்தேரோட்டம்
x
தினத்தந்தி 16 Dec 2021 1:08 AM IST (Updated: 16 Dec 2021 1:08 AM IST)
t-max-icont-min-icon

10 ஆண்டுகளுக்கு பிறகு சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தங்கத்தேரோட்டம் நேற்று நடைபெற்றது. அமைச்சர்கள், பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர்

சமயபுரம், டிச.16-
10 ஆண்டுகளுக்கு பிறகு சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தங்கத்தேரோட்டம் நேற்று நடைபெற்றது. அமைச்சர்கள், பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர்
சமயபுரம் மாரியம்மன் கோவில்
அம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவில். இக்கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள். இக்கோவிலில் தங்கத்தேர் இழுப்பது சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டது.
இந்நிலையில், தமிழக அரசு அறிவுறுத்தலின்படி, திருச்செந்தூர் முருகன் கோவிலில் சில தினங்களுக்கு முன்பு தங்கத்தேர் இழுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சமயபுரம் மாரியம்மன் கோவிலில் தங்கத்தேர் இழுப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதற்காக பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு இருந்த தங்கத்தேரை சுத்தப்படுத்தி மின்விளக்குகள் பொருத்தும் பணி நடைபெற்றது.
தங்கத்தேரோட்டம்
நேற்று தங்கத்தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக மாலை 6.57 மணிஅளவில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில்  தங்கத்தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து இரவு 7.08 மணி அளவில் தங்கத்தேரை தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர் வடம்பிடித்து தொடங்கி வைத்தனர். தொடர்ந்து பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர். தேர் கோவில் வெளிப்பிரகாரத்தில் உலா வந்து 7.18 மணிக்கு நிலையை அடைந்தது.
நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ.க்கள், அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு தங்கத்தேர் ஓடியதால் பக்தர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சமயபுரம் மாரியம்மன் கோவில் இணை ஆணையர் (பொறுப்பு) செல்வராஜ் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.
வயலூர் முருகன் கோவில்
முன்னதாக அமைச்சர் சேகர்பாபு திருப்பைஞ்சீலி நீலிவனேஸ்வரர் கோவில், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உப கோவிலான திருவெள்ளறை புண்டரீகாட்ச கோவில் ஆகிய கோவில்களில் ஆய்வு செய்தார்.
இதேபோல் திருச்சி வயலூர் முருகன் கோவிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்தார். முன்னதாக அவர் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து மரத்தேரின் நிலைக்குறித்தும், அதனை தேக்கு மரத்தில் சீரமைக்கவும் அறிவுறுத்தினார். மேலும் அவர் தெப்பக்குளத்தை ஆய்வு செய்தார். குளத்தில் உள்ள குப்பைகளை அகற்றவும், பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவும் அறிவுறுத்தினார்.
பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, 10 ஆண்டுகளாக அறங்காவலர்கள் நியமிக்கப்படாமல் இருந்தனர். தற்போது 300 கோவில்களுக்கு அறங்காவலர்கள் நியமனம் குறித்து அறிவிப்பு வெளியிட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. விரைவில்குழு அமைத்து அடுத்த ஆண்டுக்குள் அறங்காவலர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றார்.

Next Story