வத்தலக்குண்டுவில் மனைவியை குத்திக்கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
வத்தலக்குண்டுவில் குடும்ப தகராறில் மனைவியை குத்திக்கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து திண்டுக்கல் மகிளா கோர்ட்டு தீர்ப்பளித்தது.
திண்டுக்கல்:
வத்தலக்குண்டுவில் குடும்ப தகராறில் மனைவியை குத்திக்கொலை செய்த தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து திண்டுக்கல் மகிளா கோர்ட்டு தீர்ப்பளித்தது.
பெண் குத்திக்கொலை
திண்டுக்கல் மாவட்டம் பழைய வத்தலக்குண்டுவை சேர்ந்தவர் ஹபிப்ரகுமான் (வயது 45). இவருடைய மனைவி ராபியா (40). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கூலித்தொழிலாளியான ஹபிப்ரகுமான் வெளியூரில் தங்கியிருந்து வேலை செய்தார். அவ்வப்போது வீட்டுக்கு வந்து சென்றார். அதேபோல் ராபியா வத்தலக்குண்டுவில் ஒரு கடையில் வேலை செய்தார். இது ஹபிப்ரகுமானுக்கு பிடிக்காததால் வேலைக்கு செல்ல வேண்டாம் என்று கூறி வந்தார்.
இந்தநிலையில் ராபியா குடும்ப செலவுக்கு பணம் கேட்டதால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது. அதன்படி கடந்த 5.10.2017 அன்று கணவன்-மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த ஹபிப்ரகுமான் கத்தியால் ராபியாவின் கழுத்தில் குத்திவிட்டு ஓடிவிட்டார். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்த ராபியா பரிதாபமாக உயிரிழந்தார்.
கணவருக்கு ஆயுள் தண்டனை
இதுகுறித்து வத்தலக்குண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து ஹபிப்ரகுமானை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கு திண்டுக்கல் மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது.
இந்தநிலையில் அந்த வழக்கின் இறுதி விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி புருஷோத்தமன், குற்றம் சாட்டப்பட்ட ஹபிப்ரகுமானுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
Related Tags :
Next Story