ஒரு தரப்பினர் கொட்டகை அமைக்க முயன்றதால் பதற்றம்


ஒரு தரப்பினர் கொட்டகை அமைக்க முயன்றதால் பதற்றம்
x
தினத்தந்தி 16 Dec 2021 1:25 AM IST (Updated: 16 Dec 2021 1:25 AM IST)
t-max-icont-min-icon

செந்துறை அருகே பிரச்சினைக்குரிய இடத்தில் ஒரு தரப்பினர் கொட்டகை அமைக்க முயன்றதால் பதற்றம் ஏற்பட்டது.

செந்துறை
அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள கீழமாளிகை கிராமம் அருகே இரு தரப்பினர் வசித்து வருகின்றனர். அப்பகுதியில் வசிக்கும் ஆதி திராவிடர்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்குவதற்காக அதே பகுதியில் வசிக்கும் மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த 13 விவசாயிகளிடம் இருந்து கடந்த 1980-ம் ஆண்டு 2.63 ஏக்கர் நிலத்தை மாவட்ட நிர்வாகம் கையகப்படுத்தியது.
இதற்கு நிலத்தை பறிகொடுத்த விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் அதற்கான இழப்பீடு தொகையையும் வாங்க மறுத்து விட்டனர்.
 அதனைத் தொடர்ந்து அரசுக்கு எதிராக அரியலூர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கு விசாரணை முடிந்து 1987-ம் ஆண்டு அரசுக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனை எதிர்த்து அரியலூர் சார்பு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை முடிந்து 1990-ம் ஆண்டு விவசாயிகளுக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதாக கூறப்படுகிறது. அதன்பின்னர் அரசு தரப்பில் எவ்வித மேல்முறையீடும் செய்யவில்லை என்று தெரிகிறது.
கோர்ட்டில் வழக்கு
 இந்தநிலையில் கடந்த 2002-ம் ஆண்டு அப்போதைய செந்துறை ஆதிதிராவிடர் நலத்துறை தாசில்தார் காசி, சம்பந்தப்பட்ட மனையை அளக்க சென்றார். அப்போது நில உரிமையாளர்கள் நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக செயல்படுவதாக கூறி நிலத்தை அளக்க எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கே மோதல் ஏற்பட்டது. இதுகுறித்து தாசில்தார் அளித்த புகாரின்பேரில் நில உரிமையாளர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டனர். 
இதனை தொடர்ந்து நில உரிமையாளர்கள் 2006-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தனர்.  இந்த வழக்கு தற்போது வரை நடந்து வருகிறது. 
கொட்டகை அமைக்க முயற்சி
 இந்தநிலையில், ஒரு தரப்பினர் நேற்று பிரச்சினைக்குரிய இடத்தில் கொட்டகை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவிக்கவே, அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த ஜெயங்கொண்டம் (பொறுப்பு) துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜன் தலைமையில் இரும்புலிக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
 பின்னர், மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரி மரினா தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் கொட்டகையை அப்புறப்படுத்தி கொள்ள வேண்டும். இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் வரை யாரும் சம்பந்தப்பட்ட இடத்தில் அத்துமீறி நுழைய கூடாது என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து இரு தரப்பினரும் அமைதியாக கலைந்து சென்றனர். இதுதொடர்பாக இரு தரப்பினரிைடயே மோதல் ஏற்படாமல் தடுப்பதற்காக இரும்புலிக்குறிச்சி போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Next Story