அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 2 கோவில்களை கொண்டு வர முயற்சி


அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 2 கோவில்களை கொண்டு வர முயற்சி
x
தினத்தந்தி 16 Dec 2021 1:41 AM IST (Updated: 16 Dec 2021 1:41 AM IST)
t-max-icont-min-icon

அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 2 கோவில்களை கொண்டு வர முயற்சி

தலைவாசல், டிச.16-
தலைவாசல் அருகே 2் கோவில்களை அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர அதிகாரிகள் முயன்றனர். அப்போது இருதரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.
சிவன், பெருமாள் கோவில் பிரச்சினை
சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே வடகுமரை கிராமத்தில் சிவன், பெருமாள் கோவில்கள் உள்ளன. பழமையான இந்த கோவில்கள் வடகுமரை கிராமத்தை சேர்ந்த ஒரு தரப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தநிலையில் அதே ஊரை சேர்ந்த மற்றொரு தரப்பினர் தங்களையும், கோவில்களில் வழிபட அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதொடர்பான வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நடந்து வருகிறது. இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு கோவில்கள் தொடர்பாக இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் கடந்த 3 மாதங்களாக கோவில்கள் பூட்டப்பட்டுள்ளன.
ஐகோர்ட்டில் வழக்கு
இதனிடையே கோவில்களில் வழிபட அனுமதி கேட்டும், அதனை இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர வலியுறுத்தியும், ஒரு தரப்பினர் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.
இதேபோல் அதேபகுதியை சேர்ந்த ஒருவர் கோவில்கள் தனது முன்னோர்களின் இடத்தில் இருப்பதாகவும், எனவே அதனை அறநிலையத்துறையினர் கையகப்படுத்தும் திட்டத்துக்கு தடை விதிக்கக்கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். 
கட்டுப்பாட்டில் கொண்டு வர முயற்சி
இந்தநிலையில் நேற்று காலை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள், வருவாய்த்துறையினர், தலைவாசல் போலீசார் கோவில்களை அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரவும், அதனை திறந்து அனைத்து தரப்பினரையும் வழிபட அனுமதி வழங்கவும் அங்கு சென்றனர். இதனை அறிந்து ஏராளமானோர் அங்கு குவிந்தனர். 
அதில் ஒரு தரப்பினர் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் சிவன், பெருமாள் கொவில்களை கொண்டு வர எதிர்ப்பு தெரிவித்தும், மற்றொரு தரப்பினரை கோவிலில் அனுமதிக்கக்கூடாது என்றும் கூறி தர்ணாவில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபினவ் சம்பவ இடத்திற்கு சென்றார். மேலும் அங்கு 4 துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.
தீக்குளிக்க முயற்சி-தள்ளுமுள்ளு
அப்போது தர்ணாவில் ஈடுபட்ட ஒரு தரப்பை சேர்ந்த சிலர் மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதுடன், அவர்கள் வைத்திருந்த மண்எண்ணெய் கேன்களையும் பறிமுதல் செய்தனர்.
இதற்கிடையே மற்றொரு தரப்பினர் தேங்காய், பழம் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய தாம்பூலத்தட்டுகளுடன், மேள, தாளங்கள் முழங்க கோவிலில் சாமி  தரிசனம் செய்ய வந்தனர். அவர்களை பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும், அவர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த பொதுமக்கள் கோவிலை திறக்க வலியுறுத்தியும், சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கக்கோரியும் தர்ணாவில் ஈடுபட்டனர். 
பள்ளிக்கு விடுமுறை
இருதரப்பினரின் போராட்டம் காரணமாக அங்கு பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டது. இதனால் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது. தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீ அபினவ், ஆத்தூர் உதவி கலெக்டர் சரண்யா ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட இருதரப்பை சேர்ந்தவர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். 
இந்தநிலையில் சென்னை ஐகோர்ட்டு, கோவில் தற்போது எந்த சூழ்நிலையில் உள்ளதோ, அதே நிலையில் 3 வாரங்களுக்கு நீடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட இரு தரப்பினரிடமும் விளக்கமாக கூறப்பட்டது. இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு மதியம் 1 மணிக்கு கலைந்து சென்றனர். இருப்பினும் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்க வடகுமரை கிராமத்தில் போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Next Story