சட்டசபையில் 20-ந் தேதி மதமாற்ற தடை சட்ட மசோதா தாக்கல்


சட்டசபையில் 20-ந் தேதி மதமாற்ற தடை சட்ட மசோதா தாக்கல்
x
தினத்தந்தி 16 Dec 2021 1:53 AM IST (Updated: 16 Dec 2021 1:53 AM IST)
t-max-icont-min-icon

சட்டசபையில் வருகிற 20-ந் தேதி மதமாற்ற தடை சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதாக போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா கூறியுள்ளார்.

பெலகாவி: சட்டசபையில் வருகிற 20-ந் தேதி மதமாற்ற தடை சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதாக போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா கூறியுள்ளார்.

எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு 

கர்நாடகத்தில் சில பகுதிகளில் ஏழை மக்களை சிலர் பணம், பொருள் ஆசை காட்டி மதமாற்றம் செய்து வருகின்றனர். பா.ஜனதா எம்.எல்.ஏ. கூலிகட்டி சேகரின் தாயும் வேறு மதத்திற்கு மாறி இருந்தார். பின்னர் அவர் தனது சொந்த மதத்திற்கு திரும்பினார். இந்த நிலையில் கர்நாடகத்தில் மதமாற்ற தடை சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று கூலிகட்டி சேகர் எம்.எல்.ஏ. அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.

இதுபோல பலரும் மதமாற்ற தடை சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று அரசை வலியுறுத்தி வந்தனர். இதனால் மதமாற்ற தடை சட்டத்தை அமல்படுத்த அரசும் முடிவு செய்தது. இதற்கு கிறிஸ்தவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. பேராயர்கள், முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையை சந்தித்து மதமாற்ற தடை சட்டத்தை அமல்படுத்த வேண்டாம் என்று கேட்டு கொண்டனர். எதிா்கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.

பயப்பட தேவை இல்லை

இந்த நிலையில் பா.ஜனதாவை சேர்ந்த எம்.எல்.சி.யான துளசி முனிராஜ் கவுடா, மேல்-சபையில் மதமாற்ற தடை சட்ட தனிநபர் மசோதாவை தாக்கல் செய்ய முடிவு செய்து இருந்தார். இந்த நிலையில் கட்டாய மதமாற்ற சட்டத்தில் கிறிஸ்தவர்களுக்கு பாதிப்பு இல்லை என்று முதல்-மந்திரி கூறி இருந்தார். இதனால் கர்நாடகத்தில் கட்டாய மதமாற்ற தடை சட்டம் அமல்படுத்துவது உறுதியானது. இந்த நிலையில் போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா பெலகாவியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் மதமாற்ற தடை சட்டத்தை கொண்டுவருவது என்று நாங்கள் முடிவு செய்துள்ளோம். இதற்கான சட்ட மசோதா வருகிற 20-ந் தேதி சட்டசபையில் தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளோம். மசோதா தயாரிக்கும் பணி இறுதிக்கட்டத்தில் உள்ளது. இது முக்கியமான மசோதா என்பதால், ஒவ்வொரு வார்த்தையும் மிகவும் கவனித்து சேர்க்கப்படுகிறது. சட்டசபையில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு மந்திரிசபை கூட்டத்தில் அந்த மசோதாவுக்கு ஒப்புதல் பெறப்படும். இநத மசோதாவை கண்டு பிற மதத்தினர் பயப்பட தேவை இல்லை. தவறு செய்பவர்கள் தான் பயப்பட வேண்டும்.
இவ்வாறு அரக ஞானேந்திரா கூறினார்.

Next Story