‘தினத்தந்தி‘ புகார் பெட்டி: மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள்
‘தினத்தந்தி’ புகார் பெட்டிக்கு 99626 78888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-
மீண்டும் பிரகாசித்த தெரு விளக்குகள்
செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி நந்திவரம் ராணி அண்ணாநகர் 3-வது குறுக்குத்தெருவில் ஒரு மாதத்துக்கும் மேலாக மின்விளக்கு பழுதாகி இருக்கும் செய்தி, ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் வெளியானது. இதனையடுத்து மின்வாரியம் மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக அப்பகுதியில் தெருவிளக்குகள் மீண்டும் பிரகாசிக்க தொடங்கியுள்ளன. இதற்காக அப்பகுதி மக்கள் மின்வாரிய அதிகாரிகளுக்கும், ‘தினத்தந்தி’ பத்திரிகைக்கும் நன்றி தெரிவித்து உள்ளனர்.
கழிவுநீர் உடனடி அகற்றம்
சென்னை சூளை காளத்தியப்பா தெருவில் கழிவுநீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு சாலையில் கழிவுநீர் தேக்கம் அடைந்திருந்த செய்தி, ‘தினத்தந்தி’ புகார் பெட்டியில் சுட்டிக்காட்டப்பட்டது. இதனைத்தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு கழிவுநீரை உடனடியாக அகற்றியுள்ளனர். இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர்.
சாலை சீரமைக்கப்படுமா?
சென்னை குரோம்பேட்டை புருஷோத்தம் நகர் 3-வது குறுக்கு தெரு, 5-வது மெயின் ரோடு ஆகிய இடங்களில் குடிநீர் மற்றும் மின் இணைப்புக்காக தோண்டப்பட்ட பள்ளங்கள் சரியாக மூடப்படாமல் உள்ளது. இதனால் இந்த சாலையில் பயணிப்பது மிகுந்த சிரமமாக உள்ளது. எனவே இந்த சாலையை உடனடியாக சீரமைத்து தரவேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
- குரோம்பேட்டை புருஷோத்தம் நகர் மக்கள்.
பழுதடைந்த மின்கம்பத்தால் அச்சம்
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் தேரடி தெருவில் அமைந்துள்ள மின்கம்பம் மிகவும் பழுதடைந்து உள்ளது. சிமெண்ட் பூச்சு பெயர்ந்துள்ள நிலையில் கம்பத்தில் உள்ள கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் அப்பகுதியினர் அச்சமடைந்து உள்ளனர். எனவே இந்த பழுதடைந்த மின்கம்பத்தை அகற்றி புதிய மின்கம்பம் அமைத்திட மின்வாரியம் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.
- கோதண்டராமன், மீஞ்சூர்.
அரசு ஆஸ்பத்திரி கழிப்பறை படுமோசம்
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் உள்ள கழிப்பறை படுமோசமாக இருக்கிறது. கதவுகள் உடைந்தும், உள்ளே நுழையமுடியாதவாறு அசுத்தமாகவும் காட்சியளிக்கிறது. அரசு ஆஸ்பத்திரி கழிப்பறை என்றாலே இப்படித்தானா... என்றே எண்ண தோன்றுகிறது. நோயாளிகள் மற்றும் உறவினர்கள் நலன் கருதி ஆஸ்பத்திரி கழிப்பிடம் சுத்தம் செய்து பராமரிக்கப்படுமா?
- அய்யப்பன் ஜெகதீசன், புச்சிரெட்டிப்பள்ளி.
சிதிலமடைந்து வரும் அங்கன்வாடி மையம்
திருவள்ளூர் மாவட்டம் காரனோடை ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே ஒரு அங்கன்வாடி மையம் உள்ளது. இது எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட கட்டிடம். 60 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த கட்டிடம் இப்போது சிதிலமடைந்து வருகிறது. சுவர்களில் நிறைய விரிசல்கள் இருக்கின்றன. இதனால் இங்கு பிள்ளைகளை அனுப்பவே பெற்றோர் தயங்குகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கள ஆய்வு புதிய அங்கன்வாடி மையம் கட்டிடம் அமைக்க ஏற்பாடு செய்திட வேண்டும்.
- ஆர்.லோகேஸ்வரராவ், காரனோடை.
அடிப்படை வசதிகள் இல்லை
காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் வெங்கடாபுரம் நல்லீஸ்வரர் நகர் விரிவாக்கம் பகுதியில் தெருவிளக்கு, குடிநீர் குழாய், கால்வாய் போன்ற அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை. மின்கம்பம் நடப்பட்டதோடு சரி, மின் இணைப்பு வழங்கப்படவே இல்லை. இப்பகுதியில் கொடிய விஷப்பாம்புகள் நடமாட்டம் உள்ளது. எனவே இப்பகுதியில் தெரு மின்விளக்கு உள்பட அத்தியாவசிய வசதிகளை செய்து தர வேண்டும்.
-மணி, வெங்கடாபுரம், குன்றத்தூர்.
பிளாஸ்டிக் கழிவுகள் எரிப்பு
செங்கல்பட்டு மாவட்டம் ஜமீன் பல்லாவரம் தர்கா சாலையில் (கச்சேரி மலை அருகில்) அடுக்குமாடி குடியிருப்புகள் இருக்கும் பகுதியில் கடந்த சில நாட்களாக சிலர் பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களை தொடர்ந்து எரித்து வருகிறார்கள். இதனால் நச்சுப்புகை காற்றில் பரவி அப்பகுதிவாசிகளுக்கு சுவாச பிரச்சினை உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்படுகின்றன. தொடர்கதையாகி வரும் இந்த சம்பவத்தில் ஈடுபட்டு வருவோர் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
- ஏ.பி.மதிவாணன், தர்கா சாலை.
பஸ் நிறுத்த மேற்கூரை சேதம்
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட வேளச்சேரி சாலையில் உள்ள கேம்ப் ரோடு பஸ் நிறுத்தத்தில் மேற்கூரை கடும் சேதம் அடைந்திருக்கிறது. இதனால் பயணிகள் வெயிலிலும், மழையிலும் தவித்து போகிறார்கள். எனவே இந்த மேற்கூரையை உடனடியாக சீரமைத்து தரவேண்டும். கேம்ப் ரோட்டில் உள்ள இதர பஸ் நிறுத்தங்களிலும் இதேநிலை தொடருவதால் பயணிகளின் தவிப்பை போக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
- பி.குமார், கேம்ப் ரோடு.
தெருவிளக்கு எரியவில்லை
செங்கல்பட்டு மாவட்டம் பெருங்களத்தூர் அன்பு நகர் கக்கன்ஜி தெருவில் சுமார் ஒரு மாத காலமாக தெரு விளக்கு எரியவில்லை. இதனால் பல அசம்பாவிதங்கள் ஏற்படுகின்றன. மாலை மற்றும் இரவு நேரங்களில் தெருவில் நடக்கவே இப்பகுதிவாசிகள் அச்சம் கொள்கிறார்கள். சிறுவர்கள் விளையாடும் போது பல நேரங்களில் கீழே விழுந்து காயமடைந்து விடுகிறார்கள். மக்கள் சிரமங்களை போக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படுமா?
- பொதுமக்கள், அன்புநகர்.
Related Tags :
Next Story