தூத்துக்குடியில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடியில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் மாவட்டம் முழுவதும் ரூ.400 கோடி பணப்பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது.
தூத்துக்குடி:
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூத்துக்குடியில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் மாவட்டம் முழுவதும் ரூ.400 கோடி பணப்பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது.
வேலை நிறுத்தம்
பொதுத்துறை வங்கிகளை தனியாருக்கு தாரை வார்க்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும். நாடாளுமன்றத்தில் மத்திய அரசு கொண்டு வர உள்ள 2 மசோதாவை கைவிட வேண்டும். பெரும் நிறுவனங்களிடம் இருந்து வங்கிகளுக்கு வர வேண்டிய வராக்கடன்களை முழுமையாக கடுமையான சட்டங்கள் மூலம் வசூல் செய்ய வேண்டும். பொதுத்துறை வங்கிகளை பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்களை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் நேற்று வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் நேற்று பணிக்கு வராமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் வங்கிகள் பூட்டப்பட்டு இருந்தது.
இந்த வேலை நிறுத்தத்தில் மாவட்டம் முழுவதும் உள்ள 135 வங்கி கிளைகளை சேர்ந்த 2 ஆயிரத்து 600 ஊழியர்கள் பங்கேற்றனர். இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று மட்டும் சுமார் ரூ.400 கோடி பணப்பரிவர்த்தனை பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் வங்கி சேவையை பயன்படுத்த முடியாமல் சிரமப்பட்டனர்.
ஆர்ப்பாட்டம்
மேலும் கோரிக்கையை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் சங்கங்களின் ஐக்கிய அமைப்பு சார்பில் பீச் ரோட்டில் உள்ள ஸ்டேட் வங்கி முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. தூத்துக்குடி நகர வங்கி ஊழியர் சங்கம் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு நவநீத கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க வெங்கடேசன், தங்கமாரியப்பன், ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட செயலாளர் கிருஷ்ணராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் சங்க நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் ஸ்டேட் வங்கி அதிகாரிகள் சங்க மாவட்ட செயலாளர் கெவின்ஸ்டன் நன்றி கூறினார்.
எட்டயபுரம்
இதேபோல் எட்டயபுரம் மற்றும் விளாத்திகுளம் பகுதிகளில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் இந்த பகுதியில் உள்ள வங்கிகள் மூடப்பட்டு இருந்தது. பணப்பரிவர்த்தனை எதுவும் நடைபெறாததால் பொதுமக்கள் அவதிக்குள்ளானார்.
Related Tags :
Next Story