கழுத்தில் காயத்துடன் சுற்றித்திரியும் புலி


கழுத்தில் காயத்துடன் சுற்றித்திரியும் புலி
x
தினத்தந்தி 16 Dec 2021 8:03 PM IST (Updated: 16 Dec 2021 8:03 PM IST)
t-max-icont-min-icon

கழுத்தில் காயத்துடன் சுற்றித்திரியும் புலி

பந்தலூர்

பந்தலூர் அருகே கழுத்தில் காயத்துடன் புலி சுற்றித்திரிவதால் பொதுமக்கள் பீதி அடைந்து உள்ளனர்.

புலி நடமாட்டம் 

கூடலூர் அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊருக்குள் புகுந்து புலி அட்டகாசம் செய்தது. அந்த புலி பொதுமக்களையும் அடித்து கொன்றது டன், கால்நடைகளையும் விட்டுவைக்கவில்லை. எனவே இந்த ஆட்கொல்லி புலியை வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். இதனால் பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர். 

இந்த நிலையில் பந்தலூர் அருகே உள்ள தமிழக-கேரள எல்லையான மானந்தவாடி பகுதியில் கடந்த 10 நாட்களாக கழுத்தில் காயத்துடன் ஒரு புலி சுற்றி வருகிறது. அது மாலை நேரத்தில் வனப்பகுதியை ஒட்டி உள்ள கிராமங்களுக்குள் புகுந்து கால்நடைகளை அடித்து தூக்கி செல்கிறது. 

பொதுமக்கள் பீதி 

இதனால் அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மாலையில் வெளியே நடமாட முடியாமல் பீதியில் வீட்டிற்குள்ளேயே இருக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே அந்த புலியை பிடிக்க பொதுமக்கள் விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகிறார்கள். 

இதற்காக 5-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி கண்காணித்து வருகிறார்கள். அதில் அந்த புலி கழுத்தில் காயத்துடன் சுற்றி வருவது பதிவாகி இருக்கிறது. எனவே பொதுமக்கள் யாரும் இரவில் வெளியே நடமாட வேண்டாம் என்று வனத்துறையினர் அறிவித்து உள்ளனர்.

உடனே பிடிக்க வேண்டும் 

இது குறித்து எல்லையை சேர்ந்த பொதுமக்கள் கூறும்போது, இந்த புலி கேரள எல்லையில் நடமாடி வந்தாலும் அது நீலகிரிக்குள் வர அதிக தூரம் கிடையாது. கேரள வனத்துறையினர் அங்கு கண்காணித்து வந்தாலும், எல்லை பகுதியில் இங்குள்ள வனத்துறையினரும் கண்காணித்து அது இங்கு வந்தால் உடனடியாக மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வேண்டும் என்றனர். 


Next Story