வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம்


வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம்
x
தினத்தந்தி 16 Dec 2021 8:07 PM IST (Updated: 16 Dec 2021 8:07 PM IST)
t-max-icont-min-icon

வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டம்

ஊட்டி

பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதை கண்டித்து வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ரூ.100 கோடிக்கு பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது.

வேலைநிறுத்த போராட்டம் 

2 பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரி வித்து அகில இந்திய வங்கி அலுவலர்கள், ஊழியர்கள் சங்க கூட்டமைப்பு சார்பில் 2 நாட்கள் நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டம் நேற்று தொடங்கியது. 

நீலகிரி மாவட்டத்தில் பொதுத்துறை வங்கிகள் 80 கிளைகள் உள்ளன. இந்த வங்கிகளுக்கு அலுவலர்கள், ஊழியர்கள் யாரும் நேற்று வேலைக்கு வரவில்லை. இதனால் வங்கிகள் மூடப்பட்டு இருந்தன. அலுவலர்கள், ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். 

ஊட்டியில் ஆர்ப்பாட்டம் 

ஊட்டி கமர்சியல் சாலையில் உள்ள கனரா வங்கி முன்பு அலுவலர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மண்டல செயலாளர் கார்த்திக் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மோகன் முன்னிலை வகித்தார்.  பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கப்படுவதை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் கோஷம் எழுப்பப்பட்டன. 

அதேபோல் ஊட்டி ஸ்டேட் வங்கி முன்பு அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆர்ப் பாட்டம் நடந்தது. வங்கி ஊழியர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

ரூ.100 கோடி பரிவர்த்தனை பாதிப்பு

இது குறித்து நீலகிரி மாவட்ட வங்கி ஊழியர்கள் சங்க பொதுச்செயலாளர் ராஜ்குமார் கூறும் போது,  நீலகிரியில் வேலைநிறுத்த போராட்டம் காரணமாக பணம் மற்றும் காசோலை பரிவர்த்தனை ரூ.100 கோடிக்கு பாதிக்கப்பட்டு உள்ளது என்றார். 

நீலகிரியில் இன்றும் (வெள்ளிக்கிழமை) வேலைநிறுத்த போராட்டம் நடக்கிறது. ஆன்லைன் சேவை தடையின்றி நடந்து வருகிறது. வங்கி ஏ.டி.எம்.களில் போதுமான பணம் நிரப்பப்பட்டு உள்ளது. இருப்பினும் வங்கிகள் மூடப்பட்டதால் அங்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

கூடலூரில் வங்கிகள் மூடல்

நீலகிரி மாவட்டத்திலும் வங்கி ஊழியர்கள் நேற்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் வங்கிகள் மூடப்பட்டதால் வாடிக்கையாளர்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகினர். மேலும் பண பரிவர்த்தனைகள் நடைபெறாததால் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டனர்.


Next Story