வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்


வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்
x
தினத்தந்தி 16 Dec 2021 10:13 PM IST (Updated: 16 Dec 2021 10:13 PM IST)
t-max-icont-min-icon

பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் மசோதாவை கைவிட வலியுறுத்தி விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக ரூ.450 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டது.

விழுப்புரம், 

மத்திய அரசு, பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் வகையில் வருகிற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் சட்டங்கள் குறித்த மசோதாவை அறிமுகப்படுத்தி பொதுத்துறை வங்கிகளை தனியாருக்கு தாரை வார்க்க முடிவெடுத்துள்ளது. தனியார் மயமாக்கினால் வங்கிகளில் கடன் வாங்கி ஏமாற்றியவர்கள் கூட வங்கிகளின் முதலாளியாக மாறக்கூடிய ஆபத்து ஏற்படும், எனவே அந்த மசோதாவை கைவிட வலியுறுத்தி வங்கி ஊழியர்- அதிகாரிகள் சங்கங்கள் ஒன்றிணைந்து 2 நாட்கள் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தை நேற்று தொடங்கினர்.
இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் 9 தொழிற்சங்கங்களை சேர்ந்த வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் பலர் கலந்துகொண்டுள்ளனர். இதனால் பெரும்பாலான வங்கிகள் ஊழியர்கள், அதிகாரிகள் இன்றி வெறிச்சோடியது.

வெறிச்சோடிய வங்கிகள்

அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்தில் மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் என 1,100-க்கும் மேற்பட்டோர் நேற்று பணிக்கு செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த வேலை நிறுத்த போராட்டம் காரணமாக மாவட்டத்தில் உள்ள 136 வங்கி கிளைகள் மூடப்பட்டுள்ளன. ஒரு சில வங்கிகளில் ஒன்றிரண்டு அதிகாரிகள் மட்டும் பணிக்கு வந்திருந்தனர். இருப்பினும் பெரும்பாலான அதிகாரிகள், ஊழியர்கள் யாரும் பணிக்கு வராததால் வங்கிகள் வெறிச்சோடிய நிலையில் காணப்பட்டன.

ஆர்ப்பாட்டம்

விழுப்புரம்- புதுச்சேரி சாலையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றின் முன்பு வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மோகன் தலைமை தாங்கினார்.
இதில் வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் ஸ்டான்லி, ராஜா, முகேஷ், வெங்கடேசன், லாசர், விஜயகுமார், சதீஷ், பாலமுருகன், இளையராஜா, அமீர்பாஷா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ரூ.200 கோடிக்கு பணப்பரிவர்த்தனை பாதிப்பு

மேலும் இந்த வேலை நிறுத்த போராட்டத்தினால் மாவட்டம் முழுவதும் நேற்று ரூ.200 கோடிக்கு காசோலை பரிமாற்றம் மற்றும் பணப்பரிவர்த்தனை பாதிக்கப்பட்டது. அதுபோல் ஏ.டி.எம். சேவையும் முடங்கியது. வங்கி ஊழியர்கள், அதிகாரிகளின் இந்த வேலை நிறுத்தத்தினால் வாடிக்கையாளர்கள் மிகவும் சிரமப்பட்டனர். தொடர்ந்து, இன்றும் (வெள்ளிக்கிழமை) 2-வது நாளாக வேலை நிறுத்த போராட்டம் நடக்கிறது.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட வங்கி ஊழியர்கள் கச்சேரி சாலையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு அகில இந்திய வங்கி ஊழியர் சங்க வட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் கல்யாணசுந்தரம் கண்டன உரையாற்றினார். போராட்டத்தில் ராமச்சந்திரன், சிவகுமார், கருப்பன், சுப்பிரமணியன், பழனி உள்பட 50-க்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் கலந்து கொண்டனர். முடிவில் பாபாஜி நன்றி கூறினார். 
வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தால் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட வங்கிகள் செயல்படவில்லை. வங்கிகள் வெறிச்சோடி காணப்பட்டதால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். மாவட்டம் முழுவதும் ரூ.250 கோடி பணப்பரிவர்த்தனை பாதிப்பட்டு இருப்பதாக வங்கி ஊழியர் ஒருவர் தெரிவித்தார்.

Next Story