நாகை மாவட்டத்தில் 500 வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்


நாகை மாவட்டத்தில் 500 வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்
x
தினத்தந்தி 16 Dec 2021 10:27 PM IST (Updated: 16 Dec 2021 10:27 PM IST)
t-max-icont-min-icon

தனியார் மயமாக்கும் முடிவை கண்டித்து நாகை மாவட்டத்தில் 500 வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்

வெளிப்பாளையம்:
தனியார் மயமாக்கும் முடிவை கண்டித்து நாகை மாவட்டத்தில் 500 வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
வேலை நிறுத்தம்
பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முடிவை கண்டித்து வங்கி ஊழியர்கள் நாடு முழுவதும் 16, 17 ஆகிய தேதிகளில் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடப்போவதாக வங்கி ஊழியர் சங்கங்கள் அறிவித்து இருந்தன. அதன்படி நேற்று வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர். நாகை மாவட்டத்தில் 60 வங்கிகளில் பணிபுரியும் 500 ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதை தொடர்ந்து நாகையில் கார்ப்பரேஷன் வங்கி முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு அகில இந்திய வங்கிகள் ஊழியர் சம்மேளன மாநில குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். வங்கி  ஊழியர் தேசிய கூட்டமைப்பு சங்க நிர்வாகி தேவபுரீஸ்வரன் முன்னிலை வகித்தார். இதில் வங்கி ஊழியர்கள் பலர் கலந்து கொண்டு பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கு முடிவை கைவிடக்கோரி கோஷங்கள் எழுப்பினர்.
வாடிக்கையாளர்கள் அவதி
இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் நேற்று ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் வங்கியில் பணம் செலுத்துதல், பணம் எடுத்தல், காசோலை போடுதல் உள்ளிட்ட பண வர்த்தக பரிவர்த்தனையில் ஈடுபட முடியாமல் அவதி அடைந்தனர்.
மேலும் ஏராளமான வங்கி வாடிக்கையாளர்கள் வங்கிக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பி சென்றபடி இருந்தனர். இந்த வேலை நிறுத்தப்போராட்டம் இன்றும் (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. நேற்றும், இன்றும் என 2 நாட்கள் வேலை நிறுத்தம் நடப்பதால் ஏ.டி.எம்.களில் பணம் எடுப்பதற்காக வாடிக்கையாளர்கள் குவிந்தனர்.

Next Story