சிறுமி பலாத்கார வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் அனைத்து மருத்துவர் மக்கள் முன்னேற்ற கழகம் வலியுறுத்தல்
சிறுமி பலாத்கார வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என அனைத்து மருத்துவர் மக்கள் முன்னேற்ற கழகம் வலியுறுத்தி உள்ளது.
திண்டுக்கல்:
வடமதுரை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த முடிதிருத்தும் தொழிலாளியின் 12 வயது மகள், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டாள். இதுதொடர்பான வழக்கு, திண்டுக்கல் மகிளா கோர்ட்டில் நடந்தது. அதில் குற்றம்சாட்டப்பட்ட நபர், கடந்த ஆண்டு விடுதலை செய்யப்பட்டார்.
இதையடுத்து முடிதிருத்தும் தொழிலாளர்கள் கடைகளை அடைத்து போராட்டம் நடத்தியதால் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதை விசாரித்த ஐகோர்ட்டு கிளை, கடந்த சில நாட்களுக்கு முன்பு மகிளா கோர்ட்டு தீர்ப்பை உறுதி செய்தது. இதனால் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கை மேல்முறையீடு செய்யவும், சி.பி.ஐ. விசாரிக்க கோரியும் கடந்த 14-ந்தேதி மாவட்டம் முழுவதும் முடிதிருத்தும் தொழிலாளர்கள் சலூன் கடைகளை அடைத்து போராட்டம் நடத்தியதோடு, கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
இதற்கிடையே அனைத்து மருத்துவர் மக்கள் முன்னேற்ற கழகத்தினர் நேற்று திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் ஒரு மனு கொடுத்தனர். அதில், சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, மின்சாரம் பாய்ச்சி கொல்லப்பட்டாள். போலீஸ் அதிகாரி விசாரணையில் குளறுபடி செய்ததால், சிறுமி மரணத்துக்கு நீதி கிடைக்கவில்லை. சிறுமிக்கு நடைபெற்ற கொடுமை இனிமேல் யாருக்கும் நடைபெறக் கூடாது. சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க அரசு பரிந்துரை செய்ய வேண்டும், என்று கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story