செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆய்வு கூட்டம்: சாலைகளில் கால்நடைகள் சுற்றித்திரிவதை தடுக்க நடவடிக்கை


செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆய்வு கூட்டம்: சாலைகளில் கால்நடைகள் சுற்றித்திரிவதை தடுக்க நடவடிக்கை
x
தினத்தந்தி 16 Dec 2021 10:36 PM IST (Updated: 16 Dec 2021 10:36 PM IST)
t-max-icont-min-icon

செங்கல்பட்டு மாவட்டத்தில் சாலைகளில் கால்நடைகள் சுற்றி திரிவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக ஆய்வு கூட்டத்தில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.

செங்கல்பட்டு,

தமிழ்நாடு பொதுப்பணிகள் நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை சார்பில் செங்கல்பட்டு மாவட்ட அலுவலர்களுடான சாலை பாதுகாப்பு ஆய்வு கூட்டம் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

இதில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை தா.மோ.அன்பரசன் முன்னிலை வகித்தார்.

அப்போது பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களிடம் கூறியதாவது:-

செங்கல்பட்டு மாவட்டத்தை பொறுத்தவரையில் சாலை விபத்தில் சென்ற ஆண்டு 300-க்கும் மேற்பட்ட நபர்கள் இறந்துள்ளனர். சாலை விபத்துகளை குறைக்க வேண்டும் என தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஆணையிட்டுள்ளார்.

இதன் அடிப்படையில் செங்கல்பட்டு மாவட்டத்தில் விபத்துகளை எவ்வாறு குறைப்பது என்பது குறித்து ஆட்டோ சங்கங்கள், வாடகை வாகன ஓட்டுநர் சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் கருத்துகளை கேட்க வேண்டும் என ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்தி சாலைகளை விரிவுப்படுத்த வேண்டும் எனவும், இருவழி சாலைகளை நான்கு வழிச் சாலைகளாக மாற்றித்தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

கால்நடைகளால் விபத்து

மேலும் சாலைவிபத்துகளை குறைக்க வேண்டும் என்றால் ஒரு வழிச்சாலைகளை இருவழி சாலைகளாகவும், இருவழி சாலைகளை நான்கு வழி சாலைகளாக விரிவாக்கம் செய்ய வேண்டும் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இனிவரும் காலங்களில் சாலைகள் விரிவுப்படுத்தப்படவுள்ளன. மேலும், முக்கிய சாலைகளில் கிராமங்களிலிருந்து வரும் இணைப்பு சாலைகளை குறுகிய சாலைகளாக உள்ளதால் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் பெரும்பான்மையான விபத்துகள் கால்நடைகள் சாலைகளில் சுற்றித்திரிவதால் ஏற்படுகின்றன. எனவே கால்நடைகள் சாலைகளில் சுற்றிதிரிவதை முற்றிலும் தவிர்க்க தேவையான நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாவட்ட கலெக்டரிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத்துறை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அரசு முதன்மை செயலாளர் தீரஜ் குமார் மாவட்ட கலெக்டர் ராகுல் நாத், செங்கல்பட்டு தொகுதி எம்.எல்.ஏ.க்கள் வரலட்சுமி மதுசூதனன், க.சுந்தர் அவர்கள், இ.கருணாநிதி, எஸ்.எஸ்.பாலாஜி, தலைமைப்பொறியாளர் சந்திரசேகர், மாவட்ட வருவாய் அலுவலர் மேனுவல் ராஜ், உதவி போலீஸ் சூப்பிரண்டு ஆதார்ஸ் பச்சோரா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story