நடுரோட்டில் பெண் தீக்குளித்து தற்கொலை
திருப்பூரில் கள்ளக்காதல் விவகாரத்தில் நடுரோட்டில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.
வீரபாண்டி
திருப்பூரில் கள்ளக்காதல் விவகாரத்தில் நடுரோட்டில் பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
கள்ளக்காதல்
நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர் தெய்வானை (வயது 45). இவருடைய கணவர் ராஜேந்திரன். இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகன் நெல்லையில் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். மகளுக்கு திருமணமாகி கணவருடன் வசித்து வருகின்றார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ராஜேந்திரன் இறந்து விட்டார்.
இதனால் தெய்வானை மட்டும் 8 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பூர் வந்து மங்கலம் சாலை கே.வி.ஆர். நகர் பகுதியில் வாடகை வீட்டில் குடியேறினார். பின்னர் அதே பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அப்போது அந்த நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை பார்க்கும் திருமணமான 40 வயது தொழிலாளியுடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது.
திருமணம் செய்ய வற்புறுத்தல்
இதனை தொடர்ந்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கள்ளக்காதலனிடம் தெய்வானை வற்புறுத்தியுள்ளார். ஆனால் அவர் தெய்வானையை திருமணம் செய்ய மறுத்து விட்டார். அது மட்டுமல்ல அதன்பின்னர் தெய்வானையிடம் இருந்து அவர் படிப்படியாக விலகிச் சென்றதாக தெரிகிறது.
இதனால் கள்ளக்காதலன் தன்னை ஏமாற்றி விட்டதாக கூறி திருப்பூர் தெற்கு மகளிர் போலீசில் தெய்வானை புகார் கொடுத்தார்.
தீக்குளித்து தற்கொலை
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை தெய்வானை தனது வீட்டின் முன்பாக நடுரோட்டில் மண்எண்ணெய் கேனுடன் வந்தார். பின்னர் திடீரென்று கேனில் இருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதனால் உடல் முழுவதும் தீ பரவியதால் வலி தாங்க முடியாமல் சாலையில் அங்கும் இங்கும் அலறியடித்து ஓடி கீழே விழுந்தார். உடனே அருகில் உள்ளவர்கள் தீயை அணைத்து அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளதோடு சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து திருப்பூர் மத்திய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
முதலில், பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் தெய்வானை தீக்குளித்து கொண்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், தீவிர விசாரணைக்கு பின்னர் கள்ளக்காதல் விவகாரத்தில் அவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதன் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Related Tags :
Next Story