ஆரணி பெண்ணுக்கு ஒமைக்ரான் அறிகுறி
காங்கோ நாட்டில் இருந்து திரும்பிய ஆரணி பெண்ணுக்கு ஒமைக்ரான் அறிகுறி உள்ளதால் பையூர் ஊராட்சியில் உள்ள அவரது உறவினர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.
ஆரணி
காங்கோ நாட்டில் இருந்து திரும்பிய ஆரணி பெண்ணுக்கு ஒமைக்ரான் அறிகுறி உள்ளதால் பையூர் ஊராட்சியில் உள்ள அவரது உறவினர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.
ஒமைக்ரான் அறிகுறி
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த பையூர் ஊராட்சி அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜன். இவருடைய மனைவி சாந்தி. இவர் பையூர் ஊராட்சி வார்டு உறுப்பினராக உள்ளார்.
இவரது மகள் சங்கீதா (வயது 38) இவரும் அவரது கணவர் அசோகன், மகன் சூராஜ் (12) ஆகிய மூவரும் காங்கோ நாட்டில் இருந்து கடந்த 12-ந் தேதி இந்தியா திரும்பினர்.
அவர்களுக்கு 14-ந் தேதி கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன் முடிவுகள் நேற்று இரவு வெளியானது.
அதனைத்தொடர்ந்து அவர்கள் தங்கியிருந்த ஆரணி - பையூர் அண்ணா நகரில் வீட்டில் இருந்து செய்யாறு அரசு மருத்துவமனைக்கு சங்கீதாவை அழைத்துச் சென்றனர்.
அங்கு ஒமைக்ரான் தொற்று அறிகுறி தென்பட்டதால் அவர் திருவண்ணாமலை மருத்துவக் கல்லூரியில் இன்று அனுமதிக்கப்பட்டார்.
பரிசோதனை
இதையடுத்து செய்யாறு சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் உத்தரவின் பேரில் எஸ்.வி.நகரம் ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் சுதா தலைமையில் மருத்துவ குழுவினர் ‘பி.பி. கிட்’ அணிந்த செவிலியர் உதவியாளர்களுடன் பையூருக்கு சென்று சங்கீதாவின் தாய் சாந்திக்கு பரிசோதனை செய்தனர்.
அப்போது ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், பையூர் ஊராட்சி செயலாளர் விஜயகுமார், வருவாய் ஆய்வாளர் கலைச்செல்வன் மற்றும் சுகாதாரத்துறையினர் உடன் இருந்தனர்.
அவரது வீட்டில் உள்ள ராஜன், அவரது தம்பி சதீஷ், சதீஷின் மனைவி சசிகலா மற்றும் அவருடன் உள்ள அசோகன், சுராஜ் ஆகியோர் மருத்துவ பரிசோதனைகள் செய்து கொள்ள எதிர்ப்பு தெரிவித்தனர்.
கலக்கம்
இதனால் அங்கிருந்த சுகாதாரத்துறையினர் நீண்ட நேரம் ஆகியும் அவர்களுக்கு பரிசோதனைகள் மேற் கொள்ளப்படவில்லை. பின்னர் அனைவருக்கும் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் ராஜனுக்கு உடல்நலக்குறைவு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று பையூர் ஊராட்சி மன்ற கூட்டமும் நடைபெற்றது. அப்போது சாந்தியும் அவரது மகன் சுரேசும் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இதனால் கூட்டத்தில் கலந்துகொண்ட ஊராட்சி மன்ற தலைவர் சரவணன் மற்றும் வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி செயலாளர் அனைவரும் கலக்கத்தில் உள்ளனர்.
தடை செய்யப்பட்ட பகுதி
இதுகுறித்து தகவல் அறிந்ததும் கலெக்டர் பா.முருகேஷ் உத்தரவின்படி ஆரணி வருவாய் கோட்டாட்சியர் கவிதா தலைமையில் பையூர் ஊராட்சி மன்ற தலைவர் ஏ.சரவணன் முன்னிலையில் அப்பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிப்பு செய்து தடுப்புகள் அமைக்கப்பட்டன.
அப்போது ஆரணி தாசில்தார் க.பெருமாள், ஆரணி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் கு.இந்திராணி, ஊராட்சி செயலர் விஜயகுமார் மற்றும் சுகாதார துறையினர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story