உடுமலை மடத்துக்குளம் பகுதியில் கூட்டுறவு மருந்தகம்
உடுமலை மடத்துக்குளம் பகுதியில் கூட்டுறவு மருந்தகம் திறக்கப்பட்டது. இதன் முதல் விற்பனையை அமைச்சர் கயல்விழி தொடங்கிவைத்தார்.
உடுமலை
உடுமலை, மடத்துக்குளம் பகுதியில் கூட்டுறவு மருந்தகம் திறக்கப்பட்டது. இதன் முதல் விற்பனையை அமைச்சர் கயல்விழி தொடங்கிவைத்தார்.
கூட்டுறவு மருந்தகம்
தமிழக சட்டசபையில் கூட்டுறவுத்துறை மானிய கோரிக்கையின் போது கூட்டுறவு துறையின் சார்பில் ஆண்டுக்கு 60 மருந்தகங்கள் வீதம் 5 ஆண்டுகளில் 300 மருந்தகங்கள் தொடங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி முதல்கட்டமாக நேற்று சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவுத்துறையின் சார்பில் 70 கூட்டுறவு மருந்தகங்கள் திறக்கப்பட்டன. இந்த மருந்தகங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலிக்காட்சி மூலம் திறந்துவைத்தார்.
அந்தவகையில் உடுமலை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் சார்பில் உடுமலை-தளி சாலையில் கூட்டுறவு மருந்தகம் நேற்று திறக்கப்பட்டது. காணொலிக்காட்சி மூலம் திறந்துவைத்த இந்த மருந்தகத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் குத்துவிளக்கேற்றி முதல் விற்பனையை தொடங்கிவைத்தார்.
நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத் தலைமை தாங்கினார். கூட்டுறவு சங்கங்களின் திருப்பூர் மண்டல இணைப்பதிவாளர் சொ.சீனிவாசன், தாராபுரம் சரக துணைப்பதிவாளர் மணி, உடுமலை ஆர்.டி.ஓ.கீதா, மடத்துக்குளம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வான தி.மு.க. திருப்பூர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஆர்.ஜெயராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
உடுமலை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தலைவர் ஆர்.முருகேசன் வரவேற்றார். மேலாண்மை இயக்குனர் ப.தமிழரசு, பொதுமேலாளர் பி.ரவி, கூட்டுறவுத்துறை சார்பதிவாளர்கள், உடுமலை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் மு.மகாலட்சுமி முருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
20 சதவீதம் தள்ளுபடி
இதுபோல் மடத்துக்குளம் பகுதியில் நீலம்பூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் மூலம் கூட்டுறவு மருந்தகம் திறப்பு விழா நடைபெற்றது.
மடத்துக்குளம் தாசில்தார் சைலஜா, மடத்துக்குளம் ஊராட்சி ஒன்றியக்குழு துணை தலைவர் ஈஸ்வரசாமி, கூட்டுறவு சங்க அதிகாரிகள், மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்த மருந்தகத்தில் மருந்துகளுக்கு அதன் விலையில் 20 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படும் என்று கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மடத்துக்குளம் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பாக அமைச்சரிடம் மடத்துக்குளம் ரெயில் நிலையத்தில் அனைத்து ரெயில்களும் நின்று செல்ல வலியுறுத்தி கோரிக்கை மனு வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story