வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்
தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் திருவண்ணாமலை மாவட்டத்தில் ரூ.900 கோடி பண பரிவர்த்தனைகள் பாதிக்கப்பட்டது.
திருவண்ணாமலை
தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் திருவண்ணாமலை மாவட்டத்தில் ரூ.900 கோடி பண பரிவர்த்தனைகள் பாதிக்கப்பட்டது.
வேலைநிறுத்த போராட்டம்
வங்கிகளை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் அனைத்திந்திய வங்கிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 2 நாள் வேலை நிறுத்த போராட்டம் இன்று தொடங்கியது.
அதன்படி திருவண்ணாமலை மாவட்டத்திலும் வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாக திருவண்ணாமலை போளூர் சாலையில் உள்ள இந்தியன் வங்கி மண்டல அலுவலகம் முன்பு அனைத்திந்திய வங்கிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் கூட்டமைப்பு நிர்வாகிகள் இளஞ்செழியன், பிரவீன், சுந்தர்ராஜன், ஜான், கணபதி, ராம் உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர்.
மேலும் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி கோவிந்தராஜன் இதில் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி பேசினார்.
ரூ.900 கோடி
அப்போது அவர்கள் வங்கிகளை தனியார் மயமாக்குவதை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் இளஞ்செழியன் கூறுகையில், தொடர்ந்து 2 நாட்கள் வேலை நிறுத்த போராட்டம் நடைபெறுகிறது. இதில் திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள 245 பொதுத்துறை வங்கியின் கிளைகளின் 1,150 வங்கி ஊழியர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இதன் மூலம் திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று ஒரு நாளில் ரூ.900 கோடி மதிப்பிலான பண பரிவர்த்தனைகள் பாதிக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார்.
நாளையும் (வெள்ளிக்கிழமை) வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் நடக்கிறது.
கீழ்பென்னாத்தூர்
கீழ்பென்னாத்தூரில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக வாடிக்கையாளர்கள் பாதிப்படைந்துள்ளனர்.
கீழ்பென்னாத்தூரில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு வந்த வாடிக்கையாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
இதேபோல் கண்ணமங்கலத்திலும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வங்கிகள் மூடப்பட்டு இருந்தன.
Related Tags :
Next Story