குமரியில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்; ரூ.200 கோடி பண பரிவர்த்தனை பாதிப்பு


குமரியில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்; ரூ.200 கோடி பண பரிவர்த்தனை பாதிப்பு
x
தினத்தந்தி 16 Dec 2021 11:31 PM IST (Updated: 16 Dec 2021 11:31 PM IST)
t-max-icont-min-icon

வங்கிகளை தனியார் மயமாக்குவதை எதிர்த்து குமரி மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக ரூ.200 கோடி பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டுள்ளது.

நாகர்கோவில், 
வங்கிகளை தனியார் மயமாக்குவதை எதிர்த்து குமரி மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக ரூ.200 கோடி பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டுள்ளது. 
வேலை நிறுத்தம்
பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவது குறித்து கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட நிதித்துறை பட்ஜெட்டில் மத்திய அரசு அறிவித்தது. அந்த அறிவிப்பின் அடிப்படையில் 2 வங்கிகளை தனியார் மயமாக்குவதற்கான முதல் கட்ட நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருவதாக தெரிகிறது. 
இந்தநிலையில் வங்கிகளை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 16 மற்றும் 17-ந் தேதிகளில்  வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக வங்கி ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் அறிவிக்கப்பட்டது. அதன்படி நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதே போல குமரி மாவட்டத்திலும் வங்கி ஊழியர்கள் தங்களது பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் குதித்தனர்.
ஆர்ப்பாட்டம்
இதன் காரணமாக குமரி மாவட்டத்தில் நாகர்கோவில், மார்த்தாண்டம், கன்னியாகுமரி, தக்கலை மற்றும் களியக்காவிளை உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் வங்கிகள் மூடப்பட்டு இருந்தன. கிராமப்புறங்களில் செயல்படும் வங்கிகளும் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் பண பரிவர்த்தனைக்காக வங்கிகளுக்கு சென்று பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனர். மேலும் காசோலைகளை மாற்ற முடியாமல் வணிகர்கள், வர்த்தகர்கள் பலரும் தவித்தனர்.
வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட வங்கி ஊழியர்கள் சில இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நாகர்கோவில் வடசேரியில் உள்ள ஸ்டேட் வங்கி முன் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு வங்கி சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சிதம்பரம் தலைமை தாங்கினார். அகில இந்திய வங்கி ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சாகுல் ஹமீது ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்து பேசினார். மேலும் வங்கிகளை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர். 
2-வது நாளாக
இதுகுறித்து வங்கி சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சிதம்பரத்திடம் கேட்டபோது, “குமரி மாவட்டத்தில் 260 வங்கிகள் உள்ளன. அவற்றில் 1800-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்த நிலையில் வங்கிகள் தனியார் மயமாக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து வங்கி ஊழியர்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதன் காரணமாக பண பரிவர்த்தனை பெரிதும் பாதிக்கப்பட்டது. அந்த வகையில் ஒரே நாளில் 200 கோடி ரூபாய் பண பரிவர்த்தனை பாதிக்கப்பட்டு உள்ளது. எங்களது போராட்டம் 2-வது நாளாக நாளையும் (அதாவது இன்று) நடக்கிறது” என்றார்.  
அதே சமயம் ஏ.டி.எம். மையங்கள் நேற்று வழக்கம் போல் செயல்பட்டன. அனைத்து ஏ.டி.எம். மையங்களிலும் பணம் வைக்கப்பட்டு இருந்தது. இதனால் வாடிக்கையாளர்கள் வழக்கம் போல பணத்தை எடுத்து சென்றனர். ஆனால் இன்று சில ஏ.டி.எம். மையங்களில் பணம் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது என வங்கி ஊழியர்கள் தெரிவித்தனர்.

Next Story